இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 22 மே, 2021

தாழை

 

     மூலிகைப் பெயர்......................................................தாழை

     மாற்றுப் பெயர்கள்.............................கண்டல், கேதகை

     ...........................................,பட்டிகை, பறிவை, மடி, முசலி

     ..............................................முடங்கல், கைதை, முடக்கன்

     தாவரவியல் பெயர்...........PANDANUS  ADORATISSIMUS

     ஆங்கிலப் பெயர்.......................FRAGRANT SCREW- PINE

     சுவை..........................................................................துவர்ப்பு

     தன்மை.....................................................................குளிர்ச்சி

    

 ==================================================

 

01.  தாழை குத்துச் செடி வகுப்பைச் சேர்ந்தது, குறுகிய நீண்ட ஓலைகளையும் ( இலை ) ஓலை விளிம்புகளில் கூரிய முட்களையும்  உடையது.

 

02.  வெள்ளை நிறத்தில் மணம் மிகுந்த  பூக்களிருக்கும். குத்துச் செடி வகையானாலும் பத்து அடி உயரம் வரை வளரும். தண்டு பருமனாக மரம் போல் இருக்கும்.

 

03.  காய்கள் அன்னாசிப்பழம் போன்ற தோற்றம் உடையவை.  பச்சை நிறத்தில் இருக்கும். பழங்கள் பசுமை கலந்த சிவப்பு நிறம் உடையவை.

 

04.  தண்டிலிருந்து  விழுதுகள் தோன்றி பூமிக்குள் இறங்கி  வேர்களாக மாறும். இவை தாழைக்குக் கூடுதல் ஊன்று சக்தியைக் கொடுக்கும்.

 

05.  தாழையில், செந்தாழை, வெண்தாழை என இரு வகைகள் உள்ளன.  செந்தாழை கிடைப்பதரிது.

 

06.  தாழையின் ஓலை (இலை,) பூ, சோறு, விழுது ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.

 

07.  தாழைத் தண்டின் உட்பகுதியான சோறு சூதகம் முறை தப்பாது உண்டாக்கும் மருத்துவக் குணம் உடையது.  

 

08.  தாழம்பூ பசித் தீயை உண்டாக்கும். தாழை விழுது ஆண்மையையும், குருதிப் பெருக்கையும் உண்டாக்கும்.

 

09.  தாழம் பாயில் படுப்பார்க்கு வாந்தி, தலைச்சுற்றல், பாண்டு நோய், நீராமைக்கட்டி, சிறுநீப்பெருக்கு, அழல் பெருக்கு  இவைகள் விலகும்.

 

10.  தாழம் பூவிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இதைத் தலைவலி, உடல்வலி முதலியவைகளுக்கு மேலுக்குத் தடவலாம். இதைக் காது வலிக்கும் இரண்டொரு துளி விடலாம்.

 

11.  தாழம்பூவிலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப் படுகின்றன.  தாழம்பூ தீநீர், தாழம்பூ அத்தர், தாழம்பூ ஊறல்நீர் முதலியன செய்யலாம்.

 

12.  தாழை மரத்தின் விழுதை அரைத்துப் பாலில் கலந்துக் கொடுத்து வந்தால் ஆண் மலடு நீங்கும்.

 

13.  தாழை மரத்தின் வேர்ச்சாறு 15 மி.லி யுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம்.

 

14.  தாழம் பூவை மணப்பாகு ( சர்பத் ) செய்து கொடுக்க, அது உடம்பிலுள்ள வெப்பத்தைக் குறைக்கும். அம்மை நோயை வரவொட்டாமல் தடுக்கும்.  இதன் செய்கை குங்குமப்பூவின் செய்கையை ஒத்தே இருக்கும்.

 

15.  தாழம்பூ சர்பத் செய்து மாதம் இரு முறை சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் வராது. (1014) (1946)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021} 

===================================================


தாழங்காய்

தாழம்பூ

தாழைப் பழம்



தாழை மரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக