மூலிகைப் பெயர்............................................அமுக்கரா
மாற்றுப் பெயர்கள்.........அஸ்வகந்தி, இருளிச்செவி
........................................................இடிச்செவி, அமுக்கிரி
...................................................அமுக்குரவி,அமுக்குரவு
.......................................................அமுக்கினாங்கிழங்கு
தாவரவியல்
பெயர்.................WITHANIA SOMNIFERA
ஆங்கிலப் பெயர்..................................WINTER CHERRY
சுவை........................................................................கைப்பு
தன்மை................................................................ வெப்பம்
===============================================
1) மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், சிறு கிளைகளையும் உடைய ஐந்து அடி வரை வளரக் கூடிய குறுஞ்செடி வகை.
2) கோவையிலும் தென்மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது. ஏற்றுமதிப் பொருளாகவும் பயிர் செய்யப்படுகிறது
3) .இலை, காய், கிழங்கு ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
4) உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இக் கிழங்கு ஆயுர்வேதத்தில் அசுவகந்தி என்று
அழைக்கப்படுகிறது.
5) அசுவகந்தி லேகியம், அசுவகந்தித் தைலம் ஆகியவை பெரும்பாலோர்க்கு அறிமுகம் ஆனதே.
6) இலை வெப்பகற்றும். காய் சிறு நீர் பெருக்கும். கிழங்கு உடல் தேற்றும், ஆண்மை பெருக்கும், வீக்கம் போக்கும்
7) அமுக்கராங் கிழங்கைப் பச்சையாகக் கொண்டுவந்து
பசுவின் நீர் விட்டு அரைத்து, கழலை (கிராந்தி), கழுத்துக் கழலை ( கண்ட மாலை )., வீக்கம், இடுப்பு வலி
இவைகளுக்குப் பற்றுப் போட்டால் இவை விலகும்.
8) அமுக்கரா செடியின் இலை 20 கிராம் எடுத்து விதிப்படி குடிநீர் செய்து கொடுக்கச் சுரம் தணியும். அல்லது ஊறல் நீர் செய்தும் கொடுக்கலாம்.
9) அமுக்கராக் கிழங்கைப் பாலில் வேகவைத்து, அலம்பி, உலர்த்திப் பொடி செய்து ஒரு வேளைக்கு 3 முதல் 5 கிராம் வரை தேனில் கலந்து கொடுத்தால், வாதம், கபம் இவற்றால் பிறந்த நோய்கள் நீங்கும். வீக்கம், பசியின்மை, உடல் பருமன் ஆகியவை
போகும்.
10) நெய்யுடன் கலந்து கொடுத்தால், உடலுக்கு வலிமை தரும். விந்துவைப் பெருக்கும்.
11) அமுக்கராங் கிழங்குப் பொடி 2 பங்கும், கற்கண்டு 5 பங்கும் சேர்த்து, வேளைக்கு 5 கிராம் காலை மாலை உட்கொண்டு 200 மி.லி. பசும்பால் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
12) அமுக்கராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து
சூரணமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர அவர்கட்கு இல்லற வாழ்வில் இணையற்ற இன்பம் நல்கும்.
13) அசுவகந்தி லேகியம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி எப்பேர்ப் பட்ட ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல் வாழ்வில் வெற்றியடையச் செய்ய முடியும்.
14) அமுக்கராங் கிழங்கு என்பது கிழங்கு போல் பருமனாக இராது. அதுவும் வேர்தான்.
இந்த வேருக்கு மனிதனின் வலிமையை அதிகரிக்கச் செய்யும் தன்மை உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும்.
15) அசுவகந்தி லேகியத்தை காலை மாலை என் இரு வேளைகளாக சிறு உருண்டை எடுத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரவில் உறக்கத்திலேயே சிறுநீர்
பிரியும் பிரச்சினை சரியாகும். (1958)
16) அமுக்கராச் செடியின் இலையைப் பச்சையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். (776)
17) அமுக்கரா கிழங்கு அதிமதுரம் இரண்டையும் சம அளவு எடுத்து தூள்செய்து தினசரி கால் தேக்கரண்டி நெல்லிக்காய் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் குணமாகும்.(022)
18) அமுக்கரா கிழங்குப் பொடியைத் தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்துக் கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போட்டு வந்தால் கழுத்து வலி குணமாகும். (078)
19) அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தினமும் இரவில் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியேறும்.(144)
20) அமுக்கராக் கிழங்குப் பொடியுடன் தேன் கலந்து
சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு நிவர்த்தியாகும். (502)
21) அமுக்கராக் கிழங்குப் பொடியைப் பனை வெல்லத்துடன் சேர்த்துக் காப்பி போலச் சாப்பிட்டு வந்தால் விரல் நடுக்கம் சரியாகும்.(812)
22) அமுக்கரா வேரும் பெருஞ்சீரகமும் சேர்த்து பாலில் கலந்து காய்ச்சித் தினசரி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.(1680)
23) அமுக்கரா வேர்ப் பொடி, தூதுவேளைப் பொடி இரண்டும் சேர்த்து இரண்டு கிராம் எடுத்து பாலில் கலநது கொடுத்து வந்தால் சளிக் காய்ச்சல் சரியாகும்.(1698)
24) அமுக்கரா கிழங்கு சூரணம் (பொடி) , தாளிசாதி சூரணம் (பொடி) இரண்டும் தலா 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, அதிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும்.(555)
25) அமுக்கராக் கிழங்குப் பொடியைப் பாலில் குழைத்து வீக்கம், படுக்கைப் புண்ணுக்குப் போட்டு வந்தால், அவை விரைவில் குணமாகும்.(612)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
==============================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
==============================================
![]() |
அமுக்கரா |
![]() |
அமுக்கரா |
![]() |
அமுக்கரா |