மூலிகையின் பெயர்..................................அக்கரகாரம்
மாற்றுப் பெயர்கள்......................................அக்கார்கரா
.................................ஸ்பானிஷ்பெல்லிடோரி, அக்கரம்
ஆங்கிலப் பெயர்..................................PELLITHRY ROOT
===================================================
01. தாவர அமைப்பு :- அக்கரகாரம் என்னும் இந்த மூலிகைச் செடி
கருமண் கலந்த பொறை மண்ணில் நன்கு வளரும். இலைகள் 15 செ.மீ.
நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம் பச்சை நிறமாகவும், முதிர்ச்சியாகின்ற தருணத்தில் இலேசான ஊதா
நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன்
காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம்
காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும்.
02 அக்கரகாரத்தில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
அக்கரகாரம் விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
03. அக்கரகாரத்தில் பயன் படும் பாகங்கள் :- வேர்கள் மட்டும்.
04. அக்கரகாரத்தின் மருத்துவப்
பயன்கள் :-மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன. இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு
மருந்துப் பொருள் செய்யப் பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி
நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோய்க்கும் உடனடி
நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
"அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய்
கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்."
05.
அக்கரகாரத்தால் பயங்கரமான வாத
தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை
வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.
06.
அக்கரகாரம் உபயோகிக்கும்
முறை :-
07.
இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு
அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின்
அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம்.
08.
ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு
அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக்
காய்ச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு
அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள்
செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் நீங்கும்.
09.
அக்கரகார வேரினைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக
கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பல் துலக்கி வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும்
நீங்கும்,
10.
அக்கரகாரத்தைச் சிறு துண்டுகளாக
நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி
நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும்.
11. அக்கரகாரச்
சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாக்கில் தடவினால் அதன் சோர்வை
நீங்கும். இதனை நாவிற் தடவ தடிப்பை மாற்றும். இதன்
தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன்
பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து
வதுண்டு.
12. தொண்டைக் கம்மல்
குணமாக...அக்கராகார வேரினை நீரில் அலசி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதில், தேவைக்கேற்ற அளவு
எடுத்துக்கொண்டு அதனைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதனை ஒரு
லிட்டருக்கு 75 முதல் 100 கிராம் என்ற வகையில் குடிநீரில் இட்டு சுமார் பத்து மணி நேரம் ஊறவைக்க
வேண்டும். வேர்த்துண்டுகள் நன்கு ஊறிய ஊறல் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த ஊறல் நீரில் தினமும் இரு வேளையும் வாய் கொப்பளித்துவர வேண்டும். அல்லது ஒரு
சிறிய வேர்த் துண்டை வாயில் வைத்து மென்றுவர வேண்டும். அக்கராகார வேரினை இவ்வாறு
பயன்படுத்தி வருவதால் உள்நாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைவற்றுப்
போகுதல், காய்ச்சலினால் ஏற்படும் வறட்சி ஆகியவை நீங்கும்.
13. வலிப்பில் இருந்து
விடுதலை பெற...சுத்தம் செய்து உலர்த்திய அக்கராகார வேரினை நன்கு இடித்துத் தூளாக்கித்
துணியால் சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தத் தூளை மூக்கில் வைத்து உறிந்தால் காக்கை வலிப்பால் உண்டாகும் நரம்புப் பிடிப்பு
குணமாகும்.
14.
பல் வலி நீங்க...அக்கராகார வேர்த்
தூளை 30 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு லிட்டர் குடிநீரில் இட்டு, கால் லிட்டர் அளவு
ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய அந்த வேர்க் கஷாயத்தை வடிகட்டி, ஆறவைத்துக்கொள்ள
வேண்டும். இதைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வர
வேண்டும். இதனால் பல் வலி நீங்குவதோடு பல்
ஆட்டமும் குறையும். அதோடு வாய், தொண்டை ஆகியவற்றில் புண்கள் இருந்தாலும்
குணமாகிவிடும்.
15. தளகண்டாவிழ்தம்
:- அக்கரகாரம், அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கொம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு
ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு
கோப்பையில் வழித்துச் சேகரம் செய்யவும். அப்பால்
முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில் தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளில் ஒவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனால் ஏற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும்.
இதற்கு மேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித் தேனில்
தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து
நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு
அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு
அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு
வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும்
சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விளாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும்
நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.
16. அக்கரகார மெழுகு :-அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7, கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி, சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய் பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின் கொடுத்தல் நன்று. ( இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை வலைப்பூ.
[தி.பி:2052,மேழம் (சித்திரை)17]
{30-04-2021}
-----------------------------------------------------------------------------------
![]() |
அக்கரகாரம் |
![]() |
அக்கரகாரம் |