இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சீந்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீந்தில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

சீந்தில்

 

       மூலிகைப் பெயர்.....................................................சீந்தில்        

       மாற்றுப் பெயர்கள்...................அமிர்தவல்லி, சஞ்சீவி, 

       ........................................................சோமவல்லி,  அமிர்தை,

       ................................................அமிர்தக் கொடி  .குண்டலி,

 .      ...................................................சாகாமூலி, ஆகாசவல்லி

       தாவரவியல் பெயர்.................TINOSPORA CARDIFOLIA

       ஆங்கிலப் பெயர்................HEART LEAVED MOONSEED

       சுவை..........................................................................கைப்பு

       தன்மை....................................................................வெப்பம்

 

 ==================================================

 

 

01.   சீந்தில், இதய வடிவ இலைகளையும், தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற புறத்தோலையும் உடைய ஏறு கொடி. சிறிய மஞ்சள் நிறப் பூக்களையும் கொத்தாகப் பட்டாணி அளவில் காய்களையும், சிவப்பு நிறக் கனிகளையும் கொண்டவை.

 

02.   ஆலம் விழுதுகள் போல, தண்டிலிருந்து மெல்லிய விழுதுகள் தோன்றி தரையை நோக்கி வளர்ந்து தொங்கும். கொடியின் தரைத் தொடர்பு அகற்றப்பட்டால், விழுதுகள் பூமிக்குள் இறங்கி வேரின் வேலையைச் செய்யும். கொடி இறந்து போய் விடாது.

 

03.   காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழும் தன்மை கொண்டது  சீந்தில். இலைகள் கசப்புச் சுவைனுடையவை. நன்கு முற்றிய தண்டே சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.

 

04.   கொடி, இலை, கிழங்கு, வேர் ஆகியவை பயன் தரும் பாகங்கள் ஆகும்.

 

05.   ஸ்டீராய்டுக்ச்ள், புரதம், கல்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், பியூரனாய்டு, டினோஸ்போரின், கார்டிபால், டைனோபோரிடின் போன்ற வேதிச் சத்துக்கள் சீந்திலில் உள்ளன.(Asan)

 

06.   சீந்திலில் மூன்று வகை உண்டு. சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என்பவையே அவை. பேய்ச்சீந்தில் தான் ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை என்று அழைக்கப்படுகிறது. (Asan)

 

07.   .முதிர்ந்த கொடியை நறுக்கி நன்கு இடித்து நல்ல நீரில் கரைத்து வடிக்கட்டித் தெளியவைத்தால், பாத்திரத்தின் அடியில் வெண்மையான படிவு  தென்படும். இதுவே சீந்தில் சர்க்கரை என்பது. (Asan)

 

08.   சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை வலு அடையச் செய்யும். பிற மருந்தின்  சேர்க்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.(Asan)

 

09.   சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் ஒரு லிட்டர் நீரிலிட்டு 150 மி.லி யாக வற்றக் காய்ச்சி காலை, மதியம், மாலை 3 வேளையும் 50 மி.லி வீதம் குடித்து வந்தால் மேக வெப்பம், தாகம் தீரும்.(Asan)

 

10.   முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து, காலை மாலை அரை தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர மதுமேகத்தால் (நீரிழிவு ) தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல்மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும். (Asan)

 

11.   சீந்தில் இலையை அனலில் வாட்டிப் புண்களின் மீது போட்டு வர, புண்கள்  விரைவில் குணமாகும். (Asan)

 

12.   சீந்தில், பற்பாடகம், சந்தனம், விலாமிச்சை, சுக்கு, வெட்டிவேர், சிற்றாமுட்டி, கோரைக்கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து, இடித்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு முக்காலும் சுண்டவிட்டு, மீதியை இரண்டு பங்காக்கி, காலை மாலை அருந்த பித்த சுரம் போகும்.(Asan)

 

13.   மார்பகப் புற்று நோயிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் மூலிகை சீந்தில் ஆகும்.(Asan)

 

14.   சீந்தில் இலைகளை வதக்கி, அரைத்து மூட்டுவலி,  உடல்வலி  உள்ள இடங்களில் பற்றுப் போடலாம்.(Asan)

 

15.   சீந்தில் கிழங்கைப் பொடித்து, சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து, அருந்தி வந்தால் பசியைத் தூண்டும். (Asan)

 

16.   சீந்தில் கொடி (தண்டு), சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு கோலிக் குண்டு அளவு சாப்பிட்டால் தலைவலி சரியாகும்.(Asan)

 

17.   சீந்தில் கொடியைப் பொடி செய்து காலை மாலை இரு வேளையும் 5 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.(Asan)

 

18.   சீந்தில் இலைகளை அரைத்து, சிறிதளவு உளுந்து மாவு கலந்து மூட்டுகளில் போடுங்கள். தசைகள் இறுகும். வலி நீங்கும்.(Asan)

 

19.   சீந்தில் கொடியின் (தண்டின்) சிறு துண்டை எண்ணெயில் போட்டு, காய்ச்சிய பின், சீந்தில் கொடித் துண்டை எடுத்து விட்டு எண்ணெயை மட்டும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், சளி நீங்கும்.(Asan)

 

20.   முதிர்ந்த சீந்தில் கொடியின் தண்டினை எடுத்து, உலர்த்தி, பொடித்து, காலை மாலை அரைத் தேக்கரண்டி வீதம் பாலுடன் கலந்து அருந்துங்கள். உடல் பலம் பெறும். (Asan)

 

21.   சீந்தில் கொடி, பொன்னாங்கண்ணிக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் வீதம் சாப்பிடுங்கள். கண் பார்வை தெளிவாகும்.(Asan)

 

22.   சீந்தில் கொடியின் தண்டுப் பகுதியைத் துண்டுகளாக்கி, நசுக்கி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, காலை மாலை குடித்து வருபவர்களுக்குசிக்கன் குனியாகாய்ச்சல் குணமாகும்.(Asan)

 

23.   சீந்தில் கொடி, தழுதாழை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து, தினமும் காலை மாலை இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வாத நோய் ஓடும்.(Asan)

 

24.   சீந்தில் தண்டு 20 கிராம் எடுத்து, 200 மி.லி நீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி, அதில் சிறிதளவு கிராம்புப் பொடி சேர்த்து 50 மி.லி. வீதம் 3 வேளை குடித்து வாருங்கள். உடல் சோர்வு, உடல் வலி நீங்கும்.(Asan)

 

25.   சீந்தில் தண்டு 20 கிராம் அதிமதுரம் ஒரு துண்டு, சிறிது கொத்துமல்லி விதை, சோம்பு ஒரு தேக்கரண்டி எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, 50 மி.லி வீதம் பருகுங்கள். ஈரல் நோய்கள், வயிற்றுக் கோளாறுகள், செரிமானப் பிரச்சினைகள் நீங்கும்.(Asan)

 

26.   (ஆதாரம்: நாகர்கோயில், எஸ்.மகாலிங்கம் ஆசான், 25-09-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

27.   சீந்தில் கொடிச் சாறுடன் தேன்கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.(328)

 

28.   சீந்தில்கொடியில் நன்கு முதிர்ந்தவைகளாகப் பார்த்து எடுத்து வந்து உலர்த்திப் பொடி செய்து காலை மாலை அரைத் தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் மதுமேகம் நீங்கி உடல் உரம் பெறும்.(477)

 

29.   சீந்தில் கொடி, நெற்பொரி இரண்டையும் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி தினசரி காலை மாலை இருவேளைகள் சாப்பிட்டு வந்தால், மதுமேகம் மூலம் உண்டான வெப்பம் தணியும்.(947)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

==================================================


சீந்தில் கொடி

சீந்தில் பழம்

சீந்தில் கொடி