இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நாயுருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாயுருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 மே, 2021

நாயுருவி

          மூலிகைப் பெயர.................................. ........நாயுருவி

         மாற்றுப் பெயர்கள்..................... .....காஞ்சரி, கதிரி

         ............................................சேகரி, மாமுநி  நாயரஞ்சி,           

          ...........படமுருக்கி, கிருஷ்ணப்பன்னி, சுரமஞ்சரி

.         தாவரவியல் பெயர்.......................................................

         ஆங்கிலப் பெயர்............................Achyranthes aspera

          சுவை................................கைப்பு, துவர்ப்பு, கார்ப்பு

          தன்மை.............................................................வெப்பம்

 

==================================================

 

 

01.  நாயுருவி என்பது எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும், நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடிகள். இதன் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயன் உடையவை.

 

02.  நாயுருவியின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். வெண்மை நிற நாயுருவியை விட செந்நாயுருவியே சிறந்தது. செந்நாயுருவியை படமுருக்கி என்றும் அழைப்பதுண்டு.

 

03.  நாயுருவி இலைச்சாற்றைத் தடவி வந்தால் தேமல், படை முதலியவை நீங்கும்.

 

04.  நாயுருவிச் செடியின் இலையைக் கசக்கித் தேய்க்க, தேள் கடி விஷம் இறங்கும்.

 

05.  செந்நாயுருவி இலை 10 கிராம் எடுத்து மென்மையாய் அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து காலை மாலையாக பத்து நாள் கொடுத்தால்  இரத்த மூலம் தீரும்.

 

06.  உலர்ந்த செந்நாயுருவி வேர்ப்பட்டையுடன் சமனெடை மிளகும் சேர்த்துப் பொடித்து கால் கிராம் தேனில் குழைத்துக் காலை மாலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

 

07.  நாயுருவி விதை 10 கிராம் எடுத்து, அரைத்து, காலை மாலை 2 நாட்கள் சாப்பிட்டால் பேதி தீரும்.

 

08.  துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம்  20 கிராம் கலந்து உணவில் சேர்த்து உண்ண, மூலம் அனைத்தும் தீரும்.

 

09.  நாயுருவி விதையைச் சோறு போல் சமைத்து உண்டால் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். பின்னர் சிறிது மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடித்தால் மீண்டும் பசி உண்டாகும்.

 

10.  நாயுருவி வேரால் பல் துலக்கி வந்தால், பல் தூய்மை ஆவதுடன் முகமும் வசீகரம் ஆகும்.

 

11.  நாயுருவி வேரைச் சுத்தம் செய்து வெயிலில் உலர வைத்து தூள் செய்து, இந்தத் தூளைப் பற்பொடியாகக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் உறுதி பெறும்.

 

12.  நாயுருவி வேர்களை எடுத்து சுத்தம் செய்து ஒரு மண் சட்டியில் போட்டு. எரித்துச் சாம்பலாக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை நீரில் போட்டுக் கரைத்து அடி வண்டலைக் கொட்டிவிட்டு, நீர்க் கரைசலை மட்டும் எடுத்து ஆடாமல் வைக்க வேண்டும்.  அடியில் படியும் சாம்பலை மட்டும் எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே நாயுருவி வேர்ச் சாம்பல்.

 

13.  நாயுருவி வேர்ச்சாம்பல் 5 கிராம் எடை வெல்லத்தில் கலந்து கொடுத்தால் எளிதில் பிரசவம் ஆகும்.

 

14.  நாயுருவிச் வேர் 10 கிராம் எடுத்து துண்டு துண்டாக்கி 100 மி.லி நீரில் போட்டு, பாதியாக காய்ச்சி, அந்த கசாயத்தை காலை மாலை வேளைக்கு 50 மி.லி வீதம் உள்ளுக்குக் கொடுத்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் உதிரப் போக்கு கட்டுப்படும். உடற் சோர்வு நீங்கும்.. கை, கால் வீக்கம் விலகும். நாயுருவி இலைச் சாறும் வேர்க் கசாயத்திற்குப் பதில் தரலாம்.

 

15.  நாயுருவிச் சாம்பல் ஒரு சிட்டிகை எடுத்து சிறிது தேன்விட்டுக் குழைத்து உள் நாக்கில் தடவி வந்தால் உள் நாக்கு வளர்ச்சி ( டான்சிலிடிஸ்) நீங்கும்.

 

16.  நாயுருவி வேர்க் கசாயம் அல்லது இலைச் சாறு காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வந்தால் ஒவ்வாமையால் வரும் இருமல் தீரும்.

 

17.  நாயுருவி வேர்க் கசாயம் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உண்டாகும் குல்மக் கட்டி (நீர்க்கட்டி) குணமாகும்.

 

18.  ஆண்களுக்கு உண்டாகும் விரை வீக்கம் (Hydrosil) குணமாக நாயுருவி வேர்க் கசாயம்  செய்து ஒரு தேக்கரண்டி தூய்மையான விளக்கெண்ணெய் கலந்து காலையும் இரவும் உணவுக்கு முன் சாப்பிட்டு வர வேண்டும்.

 

19.  குடல் இறக்க நோய்க்கு (Hernia) நாயுருவி வேர்க் கசாயம் காலை மாலை சாப்பிட்டு வந்தால் அறுவை சிகிச்சைக்கு அவசியமின்றி குணமாகிவிடும்.

 

20.  செந்நாயுருவி  இலையுடன், சலவை சோடா, மற்றும் சிறிது சுண்ணாம்பு கலந்து உண்ணிகள் மீது தடவி வந்தால், அவை உதிர்ந்துவிடும். (938) (1965)

 

21.  நாயுருவி இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறு பிழிந்து, இரண்டொரு துளிகள் காதில் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் குணமாகும். (063) (079) (1301)

 

22.  நாயுருவி இலையுடன் சாதிக்காய் சேர்த்து அரைத்து தேமலின் மேல் தடவி வந்தால், சில நாட்களில் தேமல் குணமாகும். (1009)

 

23.  நாயுருவி வேரினை எடுத்து அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் அணுகாது. (231)

 

24.  நாயுருவி வேரை எடுத்து நீரில் அலசி சுத்தமாக்கி, வாயில் போட்டு மென்று சாறை விழுங்கினால் தேள் கடி விஷம் முறியும். (875)

 

25.  நாயுருவி வேர், கரிசாலை வேர் இரண்டையும் பொடித்து , ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து அருந்தி வந்தால்  மூளை நரம்புகள் பலப் படும். (972)

 

26.  நாயுருவி விதைகளைப் பொடித்து அரைத் தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குணமாகும். (150)

 

27.  நாயுருவி விதை, நீர்முள்ளி விதை, வெங்காய வீதை, முருங்கை விதை, இவைகளை முருங்கைப் பிசினுடன் நீரில் கரைத்து அரைத்து சிறு உருண்டைகள் ஆக்கி, தினசரி ஒரு உருண்டை பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் உறவில் சக்தி மிகும். விந்து கெட்டிப் படும். (468)

 

28.  நாயுருவிச் செடியைப் பிடுங்கி சுத்தம் செய்து இடித்து சிலந்திப் புண் மீது வைத்துக் கட்டி வந்தால் புண்கள் குணமாகும்.  (439)

 

29.  நாயுருவிச் செடியை எடுத்து சுத்தம் செய்து அத்துடன் தென்னம் பூவின் சாறினைச் சேர்த்து மைபோல் அரைத்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு தீரும். (601)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )09]

{23-05-2021}

===================================================


நாயுருவி

நாயுருவி