இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சரக்கொன்றை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரக்கொன்றை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 மே, 2021

சரக்கொன்றை

 

        மூலிகைப் பெயர்................................சரக்கொன்றை

        மாற்றுப் பெயர்கள்.................கொண்ணை, தாமம்

        ,,,,,,,,,,,,,,,,மதலைஇதழி, கடுக்கை, இருதாமலம்

        தாவரவியல் பெயர்...............................CASSIA FISTUL

        ஆங்கிலப் பெயர்..................................CASAE FAETIDA

        சுவை......................................................................துவர்ப்பு

        தன்மை..................................................................வெப்பம்.

 

 ==================================================

 

01.  சரக்கொன்றையானது சிறகமைப்புக் கூட்டிலைகளையும், மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும், உருளை வடிவத்தில் சுமார் ஒன்றரை அடி நீளக் காய்களையும் உடைய மரம்.

 

02.  சரக்கொன்றையில் பல வகைகள் உண்டு. அவை சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, நரிக்கொன்றை, என்பன. . புலிநகக் கொன்றை, மந்தாரக் கொன்றை, முட்கொன்றை என வேறு சில வகையும் உண்டு.

 

03.  சரக்கொன்றை மரப்பட்டை, வேர்ப்பட்டை இலை வேர்,  பூ, விதை, புளி ( பழத்தின் உள்ளீடு ) ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

04.  சரக்கொன்றை இலைக் கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் 100 மி.லி .எடுத்து சர்க்கரை சேர்த்து உட்கொள்ள , கிருமி, திமிர்ப்பூச்சி ஆகியவை மலத்துடன் வெளியேறும்.

 

05.  சரக்கொன்றை இலையைத் துவையல் செய்து சோற்றுடன் கலந்து உண்ண மலம் கழியும். இலையை அரைத்து படர் தாமரைக்குப் பூசலாம்.

 

06.  சரக்கொன்றைப் பூவுக்கு, வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை, சொறி, கரப்பான், தேமல், குடல் வலி ஆகியவற்றைப் போக்கும் குணமுண்டு. வயிற்றுப் புழு, நீரிழிவு, குடலைப் பற்றிய நோய்களையும் தணிக்கும்.

 

07.  சரக்கொன்றைப் பூவை, தனியாகவோ, கொழுந்துடன் சேர்த்தோ அரைத்து பாலில் கலக்கி உண்டால் வெள்ளை, வெட்டை, பாண்டு, காமாலை குணமாகும். 

 

08.  சரக்கொன்றைப் பூவை எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி, கரப்பான் ஆகியவை நீங்கும். பூவைக் குடிநீரிட்டு உட்கொள்ள, வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

 

09.  சரக்கொன்றைப் பூவைத் தேனூறல் செய்து கொடுக்க, மலத்தை இளக்கி வெளிப்படுத்தும். இதைப் பாலுடன் கலந்து காய்ச்சி உட்கொள்ள உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர் உடலைத் தேற்றும்.

 

10.  சரக்கொன்றைப் பழத்தின் உள்ளீடான, புளியை நீர் விட்டு அரைத்து, கொதிக்க வைத்துப் பூசினால் கீல் பிடிப்பு முதலிய பிடிப்புகள் நீங்கும்.

 

11.  சரக்கொன்றை விதை, நீர், மலம் போக்கும். வெப்பமகற்றும்.

 

12.  சரக்கொன்றை மரப்பட்டையினால் பெருநோய், புழு, சூலை, செரியாமை, பித்த வாத கப தோஷங்கள் நீங்கும்.

 

13.  சரக்கொன்றை மர வேர்ப் பட்டை வண்டு கடிக்கு சிறந்த மருந்து. தேமல், சொறி ஆகியவற்றையும் போக்கும். ஆனால் மிகுதியாகக் கழிச்சல் உண்டாக்கும். சுரத்தையும் போக்கும்

 

14.  சரக்கொன்றை மரப்  பட்டை, தூதுவேளைச் சமூலம் சமனளவு எடுத்துச்  சூரணமாக்கி, அதில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

 

15.  சரக்கொன்றைப் பூவைத் தேனில் ஊறவைத்து, நன்கு ஊறியதும், சில பூக்களை எடுத்துச் சாப்பிட்டு, பாலும் அருந்தி வந்தால் மலச் சிக்கல் வராது.(344) (646)

 

16.  சரக்கொன்றை இலைகளை அரைத்து உடலில் பூசி வந்தால் ஊறல், அரிப்பு குணமாகும்.(440) (1156)

 

17.  சரக்கொன்றை விதையை அரைத்து பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி, மூட்டுப் பிடிப்பு ஆகியவை குணமாகும்.(311) (1896)

 

18.  சரக்கொன்றைப் பூவைப் பறித்து வந்து சுத்தம் செய்து மைய அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.(329)

 

19.  சரக்கொன்றை வேர், ஆவாரை வேர், நாவல் மரப் பட்டை, கோரைக் கிழங்கு கோஷ்டம் ஆகியவை சம அளவு எடுத்து இடித்து, பொடி செய்து, இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலக்கிக் குடித்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும். நாளடைவில் குணமாகும்.(337)

 

20.  சரக்கொன்றை மரத்தின் வேரை எடுத்து வந்து சுத்தம் செய்து நீர் விட்டுக் கசாயம்   செய்து  50  மி.லி அளவுக்குக் குடித்து  வந்தால்  மேக  ரணம் ( நீரிழிவுப் புண் ) தீரும்.(1314) சொறி சிரங்கு நீங்கும் (1886)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )06]

{20-05-2021}

==================================================


சரக்கொன்றை

சரக்கொன்றை இலை

சரக்கொன்றை பூவும் காயும்

சரக்கொன்றைக் காய்

சரக்கொன்றை நெற்று

சரக்கொன்றை மரம்