இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

ஓமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஓமம்.

 

           மூலிகைப் பெயர்....................................................ஓமம்

           மாற்றுப் பெயர்கள்...........அசமோதம், அசம்தாகம்

           .................................................அசம்தா ஓமம், தீப்பியம்

           தாவரவியல் பெயர்........................CARUM COPTICUM

           ஆங்கிலப் பெயர்.....................................................BASIL

            ........................................................The Bishop’s Weed Seed

    ==================================================

 

01. வாசனை மிகுந்த செடி வகையைச் சார்ந்தது ஓமம். ஒரு மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சிறிய வெண்மை நிறப் பூக்கள் காணப்படும். இலைகள்  இலேசான சிறகு போன்ற பிளவுபட்ட அமைப்பைக் கொண்டது. (Asan)

 

02. தண்டில் இருந்து பக்க வாட்டில் காம்புகள் நீண்டு வளர்ந்திருக்கும். இச்செடியில் இருந்து பெறப்படும்  உலர்ந்த காய்களே ஓமம். (Asan)

 

03. கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது ஓமம். இச்செடியின் இலை, வேர், கனி, விதை ஆகியவை பயன்தரும் பாகங்கள் ஆகும். (Asan)

 

04. ஓமத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கரோட்டின், ரிபோபிளேவின், தையாமின், நியாசின் போன்ற சத்துகள் இருக்கின்றன. (Asan)

 

05. தினமும் சிறிதளவு ஓமத் தண்ணீர் குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.  ஓமத்தை துணியில் கட்டி மோந்து பார்த்தால், மூக்கடைப்பு, சைனஸ் நீங்கும். (Asan)

 

06. தினமும் உணவு சாப்பிட்டதும் ஒரு சிட்டிகை ஓமத்தை வாயில் போட்டு மென்றால், செரிமானம் ஏற்படும். (Asan)

 

07. ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் சுறுசுறுப்பு ஏற்படும். ஓமத்தைப் பொடித்து தலையில் தேய்த்தால் நீர்க் கோவை குறையும். (Asan)

 

08. சிறிதளவு ஓம எண்ணெயை மூட்டுவலி, மார்ச்சளி, ஒற்றைத்  தலைவலி உள்ள இடங்களில் தடவலாம். (Asan)

 

09. சிறிதளவு ஓமத்துடன் வெல்லம் சேர்த்து தின்றால் வயிற்றுப் பூச்சி அழியும். (Asan)

 

10. ஓமம், கிராம்பு, உப்பு சேர்த்து நன்கு மென்று நீரை விழுங்கினால், இருமல் தொல்லை தணியும்.கபம், சளி கரையும். (Asan)

 

11. ஓமத்தை அரைத்துப் பற்றுப் போடுவதும், வறுத்து ஒற்றடம் கொடுப்பதும் உண்டு. (Asan)

 

12. ஓமம் அறுகம் புல் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் நாட்பட்ட புண்கள் ஆறும். (Asan)

 

13. ஓமமும் வேப்பிலைக் கொழுந்தும் சேர்த்து அரைத்து நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி அருந்தினால் கிருமிகள் அழியும். (Asan)

 

14. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனை வெல்லம் சேர்த்து, காலையில் அருந்தினால் உடல் பலம் பெறும். (Asan)

 

15. அரிசி கழுவிய நீரில் ஓமத்தை ஊறவைத்து  சூடு செய்து குடித்தால் புளித்த ஏப்பம் நீங்கும். (Asan)

 

16. இரவில் ஓமத்தை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, மறு நாள் காலை குடித்து வந்தால் நன்கு பசிக்கும். (Asan)

 

17. ஓமம், பெருங்காயம், உப்பைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சினைகள் தீரும். (Asan)

 

18. அரைத் தேக்கரண்டி ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, தொடர்ந்து குடித்து வந்தால் ஆஸ்துமா வராது. (Asan)

 

19. ஓமம், திப்பிலி, ஆடாதொடை இலை, கசகசாத் தூள் தலா 20 கிராம் எடுத்து, ஒரு மண் சட்டியில் போட்டு, போதிய நீர் விட்டுக் கசாயமாகக் காய்ச்சி, தினமும் மூன்று வேளை பருகினால் ஆஸ்துமா குணமாகும். (Asan)

 

20. ஓமத்தை, தேவையான அளவு நீர் விட்டு அரைத்து, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து, வாணலியில் வைத்துச் சூடாக்கிக் கட்டினால் வீக்கம் குறையும். (Asan)

 

21. ஓமம், மிளகு, பனைவெல்லம் தலா 35 கிராம் எடுத்து நன்கு இடித்துப் பொடியாக்கி, காலை மாலை என இரு வேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் கழிச்சல், பொருமல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். (Asan)

 

22. தினமும் இரவில் அன்னாசிப் பழத் துண்டுகள் நான்கு எடுத்து  பொடித்த ஓமம் இரண்டு தேக்கரண்டி அத்துடன் சேர்த்து தண்ணீரில் இட்டு நன்கு வேக வைத்து மூடி வைக்க வேண்டும். இக்கலவையை நன்றாகக் கரைத்து தொடர்ந்து 15 நாட்கள்  காலை 5 மணி அளவில் குடித்து வந்தால் தொப்பை குறையும். (Asan)

 

23. ஒரு கரண்டி ஓமத்தை சிறிதளவு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 100 மி.லி தேங்காய் எண்ணெய் விட்டு, மீண்டும் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் கற்பூரப் பொடியைக் கலந்து  இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். (Asan)

 

24. ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து, அதில் 5 கிராம் எடுத்து, சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெள்ளைத் துணியில் வைத்து, பந்து போல் கட்டி நுகர்ந்தால், சளி ஒழுகுதல், மூக்கடைப்பு குறையும். (Asan)

 

25. ஓமத் தண்ணீர் தயாரிப்பு :- ஒரு லிட்டர் நீருக்கு150 கிராம் ஓமம் சேர்த்து, வாலை வடித்தல் முறையில் கொதிக்க வைத்து உருவாக்கப் படுவது ஓமத் தண்ணீர். வயிற்றுப் பொருமல், செரியாமை, சீதக் கழிச்சல் ஆகியவற்றுக்கு ஓமத் தீநீர் சிறந்தது. (Asan)

 

26. (ஆதாரம்: நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 04-09-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

27. ஓமம் ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு கைப்பிடி வேப்பிலை அத்துடன் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர் வடிதல் குணமாகும். (112)

 

28. ஓமம், வெள்ளைப் பூண்டு, வசம்பு ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு இரண்டு வேளை வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் ஜன்னி குணமாகும். (167)

 

29. ஓமம், மிளகு இரண்டையும் அளவோடு எடுத்து, மண்சட்டியில் போட்டு, வறுத்துக் கொண்டிருக்கும் போது  பேய்மிரட்டி இலைகள் இரண்டை அத்துடன் போட்டு சுண்டக் காய்ச்சி, ஒரு சங்கு அளவு இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்தால், குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது ஏற்படும் காசம், மாந்தம் ஆகியவை குணமாகும். (222)

 

30. ஓமத்தை நீர் விட்டு அரைத்து அடுப்பில் வைத்துக் களி போல் கிண்டி வீக்கம், வலி உள்ள இடங்களில் இளஞ்சூட்டில் பற்றுப் போட்டால் வீக்கம் கரையும். வலி நீங்கும். (305)

 

31. ஓமத்துடன் வெற்றிலை சேர்த்து இடித்துப் பிழிந்து தேன் கலந்து பருகினால் வயிற்றுப் பொருமல் குணமாகும்.(641)

 

32. ஓமம் சிறிது எடுத்து இரண்டு வெற்றிலை அதனுடன் சேர்த்து மைய அரைத்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.(667)

 

33. ஓமத்துடன் மாம்பருப்பு, மாதுளம் பூ ஆகியவை சேர்த்துப் பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டால்  கழிச்சல் குணமாகும்.(698)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

================================================

ஓமம் செடி


ஓமம் விதை