இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

நாவல்

 

        மூலிகைப் பெயர்....................................................நாவல்

        மாற்றுப் பெயர்கள்..............................................................

        தாவரவியல் பெயர்...............................Syzygium cumini

        ஆங்கிலப் பெயர்...........JAMUN FRUIT, JAVA PLUM

 

=================================================

 

01.   நீரிழிவு நோய்க்கு நாவல் நல்ல மருந்தாகும். நாவல் பழம் கருஞ்சிவப்பு  நிறத்தில் இருக்கும். சுவை மிகுந்தது.

 

02.   நாவல் பழம், இலை, விதை, மரப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

 

03.   நாவல்பட்டை நரம்புகளைப் பலப் படுத்தும். தொண்டை வறட்சி, மூச்சுக் குழல் அழற்சி, காசநோய், குடல்புண்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

 

04.   நாவல்பழங்கள் சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும். இதய தசைகளை வலுவாக்கும்.

 

05.   நாவல்பழச் சாறு, விதைகள்  ஆகியவை நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகும்.

 

06.   நாவல் கொட்டைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து, ஒரு கிராம் அளவு தூளை காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப் படும்.

 

07.   முற்றிய நாவல் மரத்தின் பட்டையை 10 X 5 செ.மீ அளவில் எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரு வேளையாக பத்து நாட்கள் குடித்து வந்தால் உதிரப் போக்கு கட்டுப்படும்.

 

08.   நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டி மூன்று தேக்கரண்டி சாறு எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். நீர்க்கட்டு தீரும். காலை மாலையாக இரண்டு நாட்கள் குடித்து வர வேண்டும்.

 

09.   நாவல் கொழுந்தினை எடுத்து நசுக்கி சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவில் குடித்தால் பேதி கட்டுப் படும். காலை மாலையாக மூன்று நாட்கள் இவ்வாறு குடிக்க வேண்டும்.

 

10.   நாவல் பட்டையை நசுக்கி நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

 

11.   நாவற்பழத்தை ஒருநாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். (029)

 

12.   நாவற்பழம், பாகற்காய், அவரைப் பிஞ்சு ஆகிவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. (341)

 

13.   நாவற்பழம் சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும்.  (504)

 

14.   நாவற்பழம் நீரிழிவைக் கட்டுப் படுத்தும்; குடற்புண்ணை நீக்கும். (1209)  (1240) (1293)

 

15.   நாவல் விதை சூரணம் 2 கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மதுமேகம் (நீரிழிவு), அதிமூத்திரம் ஆகியவை கட்டுப்படும்.  (623)

 

16.   நாவற்பட்டை, கோரைக் கிழங்கு, ஆவாரை வேர், கொன்றை வேர், கோஷ்டம் ஆகியவை சம அளவு எடுத்து இடித்து பொடி செய்து , ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்; நாளடைவில் குணமாகும்.  (337)

 

17.   நாவற்பட்டைச் சாறு, மிதிபாகல் இலைச் சாறு அல்லது மிதிபாகல் பழச் சாறு ஆகியவை எடுத்து ஒன்றாகக் கலந்து தினசரி 20 மி.லி குடித்து வந்தால் மதுமேகம் (நீரிழிவு) குணமாகும். (1447)

 

18.   நாவற்பட்டை, மருதம் பட்டை, ஆலம் விழுது ஆகியவற்றை எடுத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்து கசாயம் செய்து 48 நாட்கள் அருந்தி வந்தால் மதுமேகம் (நீரிழிவு) குணமாகும். (1466)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )10]

{24-05-2021}

===================================================

நாவற்பழம்


நாவற் பழம்

நாவற் பூ

நாவற் பழமும் கிளையும்

நாவற் காயும் பழமும்