இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நிலவேம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலவேம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

நிலவேம்பு

 

       மூலிகைப் பெயர்............................................நிலவேம்பு

       மாற்றுப் பெயர்கள்............,சிறியாநங்கை குருந்து

                 .................................மிளகாய்நங்கை, கொடிக்குருந்து

       ....................................காண்டகம், சிரட் குச்சி, கிராதம்

       ...............................................கிராகதி, நாட்டு நிலவேம்பு,

       ............................................அனாரிய தித்தம், கோகணம்

       தாவரவியல் பெயர்........ANDROGRAPHIS PANICULATA

       ஆங்கிலப் பெயர்..................................................CHIRETTA

       சுவை..............................................................................கைப்பு

       தன்மை.......................................................................வெப்பம்

 

============================================================= 

 

01. மிகவும் கசப்புச் சுவை உடைய நீண்ட இலைகளையும் நாற்கோண வடிவில் அமைந்த தண்டுகளையும் உடைய சிறு செடி. வெள்ளை நிறப் பூக்கள் காணப்படும். காய்கள் வெடித்து விதை பரவும். விதைகள் மஞ்சள் நிறமானவை.

 

02. நிலவேம்புச் செடியை சிலர் சிறியா நங்கை என்ற பெயரால் அழைக்கிறார்கள்.

 

03. பெரியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் இதை அழைக்கிறார்கள்.

 

04. இலையின் அகலம் குறைவாக (15 m.m) இருந்தால் அது சிறியாநங்கை, அகலம் சற்று பெரியதாக (30m.m.) இருந்தால் அது பெரியா நங்கை.

 

05. நிலவேம்பு, சிறியாநங்கை, பெரியாநங்கை ஆகிய பெயர்கள் ஒரே செடியைக் குறிப்பனவே ஆகும்.

 

06. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. இதில் மெதைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகிறது.

 

07. காய்ச்சல் அகற்றுதல், பசி உண்டாக்குதல், தாது பலப் படுத்துதல், முறை நோய் தீர்த்தல் ஆகிய பண்புகளை உடையது.

 

08. இந்த தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகிறது. நீர்க் கோவையைக் குணமாக்கும். இதன் இலைகள் முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். புத்தி தெளிவை உண்டாக்கும்.

 

09. இதன் முழுத் தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மி.லி வீதம் காலை மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் நச்சுக் காய்ச்சல் குணமாகும். இலைகளை அரைத்து சுண்டைக் காய் அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும்வரை சாப்பிட்டு வர வேண்டும்.

 

10. நிலவேம்பு வேரினை எடுத்து குடிநீர் செய்து ஒரு தம்ளர் வீதம் காலை மாலை தொடர்ந்து 15 நாள் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படும்.

 

11. நிலவேம்பு இலைச் சாற்றை அரைத் தம்ளர் வீதம் காலை மாலை இரு வேளைகள் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

 

12. ஐந்து கிராம் நிலவேம்பு இலைத் தூளை காலையில் உட்கொண்டால் வயிற்றுப் புழுக்கள் வெளியாகும். ஐந்து இலைகளுடன் 10 சீரகம் சேர்த்தும் மென்று சாப்பிடலாம்.

 

13. நிலவேம்பு முழுத் தாவரத்தையும் நிழலில் உலர்த்தி, பொடிசெய்து குழைத்து உடலில்பூசி 15 நிமிடங்கள் வைத்திருந்து குளித்தால் வண்டுக்கடி, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

 

14. நிலவேம்புச் செடிக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் தன்மை உண்டு.

 

15. சிக்கன்குனியா, டெங்கு போன்ற சுரங்களுக்கு நிலவேம்பு இலைக் கருக்கு (கஷாயம்) மிகச் சிறந்தது. வாதசுரம், நீர்க்கோவை, மயக்கம், பல்வகையான  சுரங்களும் நிலவேம்புக் கருக்கு குடித்து வரக்  குணமாகும்.

 

16. நிலவேம்பு 10 கிராம் எடை, கிச்சிலித் தோல் 150 கிராம், கொத்தமல்லி 150 கிராம் இவைகளை வெந்நீரில் சேர்த்து மூடிவைத்து, ஒரு மணி நேரம் சென்ற பின் வடிக்கட்டி 30 மி,லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுக்கலாம். மேற்கூறிய சிக்கன் குனியா, டெங்கு, வாத சுரங்களும் நீர்க்கோவையும் தீரும்.

 

17. நிலவேம்பு இலைச் சாற்றைக் குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்  பொருமலுக்கும், கழிச்சல்கட்கும் தரலாம்

.

18. நிலவேம்பு சமூலம் (வேருடன் கூடிய முழுச்செடி)  50 கிராம், வெந்நீர் 1 லிட்டர், கிராம்புத்தூள் அல்லது பொடித்த ஏலம் 5 கிராம் எடை எடுத்து ஒன்று கூட்டி 6 மணி நேரம் ஊறவைத்து, 30 மி.லி. வீதம் தினசரி 2 – 3 முறை கொடுத்துவர முறைச்சுரம், குளிர்ச்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை இவை போகும்.

 

19. நிலவேம்பு, கண்டங்கத்தரி வேர், வகைக்கு கைப்பிடி அளவு, சுக்கு 10 கிராம் சேர்த்து அரை லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி- ஆகக் காய்ச்சி நாளைக்கு 3 முறையாகக் குடிக்க மலேரியா குணமடையும் (131) (200)

 

20. நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் கொடி வகைக்கு 10 கிராம் எடுத்து நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லி- ஆகக் காய்ச்சி 30 மி.லி. வீதம்கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் சகலக் காய்ச்சலும் தீரும். .

 

21. நிலவேம்பு இலையைத் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காகக் காய்ச்சி வடிகட்டி அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்.(Harish)

 

22. நிலவேம்பு இலைக் கசாயத்துடன் சிறிது தேனும் மிளகுத் தூளும் கலந்து சாப்பிட்டால் சுவாசம் தொடர்பான நோய்கள் அண்டாது.(Harish)

 

23. நிலவேம்பு சமூலத்துடன், மிளகு, சுக்கு, வெட்டிவேர், சந்தனம், கோரைக் கிழங்கு, பேய்ப்புடல் சமூலம், பற்படாகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து கால் பங்காகக் காய்ச்சி, வடிகட்டி காலை மாலையாக இரண்டு வேளைகள், தலா 60 மி.லி வீதம் குடித்து வந்தால் அனைத்து விதமான சுரங்களும் தீரும். டெங்கு போன்ற சுரமும் குணமாகும்.(Harish)

 

24. விஷக் கடிகளுக்கு, நிலவேம்பு இலையைக் கழுவி  மென்று சாப்பிட்டால், விஷம் குறையும்.(Harish)

 

25. குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல்களுக்கு, நிலவேம்பு இலைச் சாற்றை 15 மி.லி அளவு கொடுக்கலாம். (Harish)

 

26. உடலில் ஏற்படும் அரிப்புகள் மறைய  நிலவேம்பு இலைகளை அரைத்துப் பற்றிட்டால் சரியாகும்.(Harish)

 

27. சிறிய சுண்டைக்காய் அளவு நிலவேம்பு இலையை அரைத்த விழுதை  உட்கொண்டால், வயிற்றுப் புழுக்கள் அழியும். (Harish)

 

28. நிலவேம்பு இலைச்  சாறை தினசரி 15 – 20 மி.லி அளவுக்கு அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். (Harish)

 

29. (தொ.எண் 21 முதல் 29 வரை ஆதாரம்: டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச்செல்வன் M.D (s),முதன்மை மருத்துவ அதிகாரி, ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், வேலூர் அவர்களின் கட்டுரை, தினமலர், பெண்கள் மலர், நாள் 28-10-2017)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

============================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை முகநூல்.

[தி.பி,2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

=============================================================


நிலவேம்புச் செடி

நிலவேம்புச் செடி

நிலவேம்புப் பூ

நிலவேம்புக் காயும் பூவும்

நிலவேம்புச் செடி

நிலவேம்புச் செடி