இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

கீழாநெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழாநெல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 மே, 2021

கீழாநெல்லி

 

              மூலிகைப் .............................................. கீழாநெல்லி

              மாற்றுப் பெயர்கள்....................:கீழ்வாய் நெல்லி

              ..............கீழ்க்காய் நெல்லி, காட்டு நெல்லிக்காய்

              .........................................பூமியாமலக்பூளியாபாலி

                 தாவரவியல் பெயர்........:PHYLLANTHUS AMARUS.

              தாவரக் குடும்பம்..........................EUPHORBIACEAE

              சுவை...................................................................கைப்பு

              தன்மை..........................................................:குளிர்ச்சி


==================================================

 

01.  மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடைய குறுஞ் செடி.
இது 60-70 செ.மீ.வரை உயரம் வளரும் இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும்.

 

02.  பயன் தரும் பாகங்கள் -: செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்

 

03.  மஞ்சள் காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்

 

04.  சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைத்து, நரம்பு, சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.மருந்தாகவும் செயற்படும்

 

05.  இம்மூலிகையினால் வயிற்று மந்தம், பித்தத்தால் விளைந்த கேடு ,கண்ணில் தோன்றும் நோய்கள், குருதிக் கழிச்சல், நீரிழிவு, மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பு,  உடலில் ஊறிய மேகம், சுரம், தாது வெப்பம், நாட்பட்ட மேகப்புண் ஆகியவை போகும்.

 

06.  கீழாநெல்லியின் இளங்கொழுந்தை எடுத்து  குடிநீர் செய்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். இலையை உப்பு சேர்த்து அரைத்து சொறி சிரங்குகளுக்குப் பூசலாம் உப்பில்லமல் அரைத்து சதைச் சிதைவுக்குப் பற்றிடலாம்.

 

 

07.  கீழாநெல்லியின் இலையையும் வேரையும் உலர்த்திப் பொடித்து கழுநீரில் குழைத்து, புண் புரைகளுக்கும், வீக்கங்களுக்கும் பூசலாம். இவ்விரண்டையும் குடிநீர் செய்து சுரங்களுக்குச் சூட்டோடு கொடுக்க காய்ச்சல் தீரும். இதனையே ஆறிய பிறகு குடித்துவர உடல் வலுக்கும். பசியைத் தூண்டும்.

 

08.  கீழாநெல்லியின் வேர், இலை ஆகியவற்றை அரைத்து மோரில் கலக்கிக் கொடுக்க, மஞ்சள் காமாலை, மேகநோய்  ஆகியவை போகும்உப்பு நீக்கவும்.

 

09.  கீழாநெல்லிவேரைக் கழு நீரில் அரைத்துக் கலக்கிக் கொடுத்து வந்தால் பெரும் பாடு விரைவில் சுகமாகும்.

 

10.  கீழாநெல்லி வேரை, பச்சையாய் 20 கிராம் எடுத்து அரைத்து, பாலில் கலக்கிக் கொடுக்க மஞ்சள் காமாலை நீங்கும்.

 

11.  கீழா நெல்லிச் சாறு , உத்தாமணிச் சாறு, குப்பைமேனிச் சாறு சம அளவு கலந்து நல்லெண்ணையில் விட்டுக் காய்ச்சி, நசியமிட (மூக்கில் சில துளிகள் விட்டால்) பீனிசம் (ஒற்றைத் தலைவலி), ஓயாத தலைவலி, நீர் வடிதல் ஆகியவை தீரும்.

 

12.  கீழாநெல்லி செடி நான்கு,  ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த விழுதை பால் மோர் ஏதேனும் ஒரு பானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க  காமாலை நிச்சயம் குணமாகும்.

 

13.  நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு கால் பலம் )9 கிராம்( பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் காய்ச்சி வடித்து தலை முழுகி வரலாம். இது கீழாநெல்லித் தைலமாகும்.

 

14.  கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி, விஷ்ணுகிராந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி, சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி வீதம் தினம் இரு வேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

 

15.  கீழாநெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வர  சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.

 

16.  கீழா நெல்லி இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக் குளித்து வந்தால் சொறி சிரங்கு, நமைச்சல் தீரும்.

 

17.  கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டு வந்தால்  மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

 

18.  கீழாநெல்லி இலைச் சாறு பொன்னாங்கண்ணி இலைச் சாறு சமனளவு  கலந்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலை முழுக, பார்வைக் கோளாறு தீரும்.

 

19.  கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள  பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

 

20.  மஞ்சள் காமாலை தீர, கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பை இலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவும்,  இளைஞர்களுக்குக் கழற்சிக் காயளவும், சிறுவர்களுக்குச் சுண்டைக் காயளவும் பாலில் கலந்து பத்து நாள் கொடுத்து வர வேண்டும்.  காரம் புளி நீக்கி, பால்சோறும் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட்டு வந்தால்  காமாலை தீரும்.

 

21.  ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.

 

22.  கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.

 

23.  கீழாநெல்லி இலைகளுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.(486)

 

24.  கீழாநெல்லி இலைகளுடன் ஓரிதழ் தாமரைப் பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாலிப வயோதிகக் குறைபாடு நீங்கும்.(780) (1955)

 

25.  கீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.(959)

 

26.  கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்த், குளித்து வந்தால் அரிப்பு, சிறு புண்கள் ஆகியவை ஆறும்..(1015) (1950)

 

27.  கீழாநெல்லி இலை, மருதாணி இலை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, இந்த விழுதிலிருந்து 5 கிராம் எடுத்து ஆட்டுப் பாலில் கலந்து  மூன்று வேளைகள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை தீரும். (1096)

 

28.  கீழாநெல்லிச் செடியும், ஓரிதழ் தாமரைச் செடியும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு சுண்டைக் காயளவு தினசரி அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், வாலிபத்தில் வரும் வயோதிகம் விலகும்.(474)

 

29.  கீழாநெல்லிச் சாறு எடுத்து கறந்த பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்த் தாரையில் இரத்தம் வருவது நிற்கும்.(962)

 

30.  கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து பொடியாகவோ குடிநீராகவோ சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1091)

 

31.  கீழாநெல்லிச் செடியைப் பிடுங்கி, சுத்தம் செய்து, மைய அரைத்து கொட்டைப் பாக்கு அளவு எடுத்து மோருடன் கலந்து தினசரி 2 வேளைகளாக இரு நாட்கள் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1095) (436) (1087)

 

32.  கீழாநெல்லிச் சாறுடன் தேன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக வீக்கம் குறையும். (1935)

 

33.  கீழாநெல்லி சமூலம், நெருஞ்சில் சமூலம் இரண்டையும் எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும்..(1429)

 

34.  கீழாநெல்லிச் செடியின் இலை மற்றும் வேரை நீக்கிவிட்டு தண்டை மட்டும் எடுத்து சிதைத்து விளக்கெண்ணையில் காய்ச்சி, ஓரிரு துளிகள் கண்ணில் விட்டு வந்தால் கண் புரை விலகும்.(019)

 

35.  கீழாநெல்லி வேரை எடுத்துக் கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைக்குத் தடவி வந்தால் முடி நன்கு வளரும்.(916)

 

36.  கீழாநெல்லிப் பொடி, மூக்கிரட்டைப் பொடி, பொன்னாங்கண்ணி இலைப் பொடி சம அளவு எடுத்து வெந்நீரிலோ, தேனிலோ சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் குணமாகும்.(018)

 

37.  கீழாநெல்லித் தைலத்தை  தலைக்குத் தேய்த்து, உடம்பில்  பூசிக் குளித்து வந்தால் தலை சுற்றல் நிற்கும்.(1126)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )04]

{18-05-2021}

===================================================


கீழாநெல்லி

கீழாநெல்லி

கீழாநெல்லி