இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செண்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செண்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 21 மே, 2021

செண்பகம்

 

        மூலிகைப் பெயர்.......................................செண்பகம்

        மாற்றுப் பெயர்கள்...................................xxxxxxxxxxxx

        தாவரவியல் பெயர்........................MANGNOLIACEAE

        ஆங்கிலப் பெயர்.......................... YELLOW CHAMPAK

 

 

==================================================

 

 

01.   செண்பக மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

02.   செண்பக மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் இருவகையில் இருக்கும்.

 

03.   பூக்கள் நறுமணம் உடையவை. பூக்களிலிருந்து நறுமண எண்ணெய் தயார் செய்வார்கள்.

 

04.   செண்பக மரத்தின் இதன் இலைகள் எப்போதும் பச்சையாக அடுக்கு வரிசையில் நீண்டு இருக்கும்.

 

05.   செண்பக மரத்தின்  காய்கள் கொத்தாக இருக்கும். பழுத்தால் சிவப்பாக இருக்கும் பறவைகள் இவற்றை விரும்பிச் சாப்பிடும்.

 

06.   செண்பக மரமானது விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

 

07.   செண்பகம் நோய் நீக்கி உடல் தேற்றுதல், முறைநோய் தீர்த்தல், உள்ளுறுப்பு அழற்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல் ஆகிய குணங்களை உடையது.

 

08.   செண்பகப்  பூ சிறுநீர் பெருக்கி, வெள்ளை படுதல், ஆண்மைக் குறைவு ஆகியவற்றைத் தீர்க்கும். பூவின் குடிநீரால் குன்மம் தீரும். பட்டையிலிருந்து செய்யப்படும்  குடிநீர், முறை சுரத்தைப் போக்கும்.

 

09.   செண்பக மரத்தின் இலையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 3 தேக்கரண்டியளவும், இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொடுத்து வந்தால் எந்த வகையான வயிற்று வலியானாலும் அது குணமாகும்.

 

10.   தேவையான அளவு செண்பக இலையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை  அடுப்பில் வைத்து, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யை அதில் விட்டு காய்ந்தவுடன் இலையைப் போட்டு,நன்றாக அதாவது இலை மிருதுவாகும்படி வதக்கி உச்சியில் கனமாக வைத்துக் கட்டி வந்தால் மண்டைக் குத்து குணமாகும். காலை மாலை புதிய இலையை வதக்கிக் கட்ட வேண்டும். மூன்று நாளில் குணம் தெரியும்.

 

11.   ஒன்பது செண்பகப் பூக்களை எடுத்து, உள்ளே சுத்தம் பார்த்து, பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, ஒரு கோப்பைத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, அரைக் கோப்பையாகக் காய்ச்சி, வடிகட்டி, காலை, மாலை அரை கோப்பை வீதம் கொடுத்து வந்தால், சொட்டு மூத்திரம், நீர்சுருக்கு இவைகள் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.

 

12.   ஒரு வாயகன்ற புட்டிலில் (Bottle) 150 கிராம் தேங்காய் எண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வீக்கம் குணமாகும்.

 

13.   அதிகச் சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள்  செண்பகப் பூவைக் கசாயம் செய்து அதனுடன் பனங் கற்கண்டு  கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

 

14.   ஆண்மைக்  குறைவு  என்பது  பல  காரணங்களால் உண்டாகிறது. இந்தக்  குறைபாடு  உடையவர்கள் செண்பகப் பூவை  நிழலில்  உலர்த்திப்  பொடியாக்கி கஷாயம்  செய்து காலை,  மாலை  இரு வேளையும் அருந்தி  வந்தால் ஆண்மைக்  குறைவு  நீங்கும்.

 

15.   இரவு படுக்கும் முன்பு ஒரு புதுச் சட்டியில் 30 செண்பகப்பூவை ஆய்ந்து போட்டு,  இரண்டு கோப்பைத் தண்ணீர் விட்டு மூடி வைத்து, இறுத்து  காலையில் வெறும் வயிற்றில் ஒரு கோப்பையும் மாலையில் ஒரு கோப்பையுமாக தொடர்ந்து  21 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள இரணம் (வயிற்றுப் புண்) கூட ஆறிவிடும்.

 

16.   முறைக் காச்சலைக் குணப்படுத்த 10 கிராம் செண்பகமரத்துப் பட்டையை நைத்து ஒரு புதுச் சட்டியில் போட்டு, ஒருகோப்பைத்  தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி, காலையில் அரைக் கோப்பையும் , மாலையில் அரைக் கோப்பையுமாக மூன்று நாட்கள் கொடுக்க முறைக் காய்ச்சல் குணமாகும்.

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )07]

{21-05-2021}

===================================================


செண்பகப் பூ

செண்பகம்

செண்பகம்

செண்பகப் பூ