மூலிகைப் பெயர்................................................அகத்தி
மாற்றுப் பெயர்கள்..................................அச்சம், முனி
...................................................................................கரீரம்
தாவரவியல் பெயர்.................................... CORONILLA
...................GRANDIFLORA, SESBANIA GRANDIFLORA
சுவை.....................................................................கைப்பு
தன்மை..............................................................குளிர்ச்சி
====================================================
01. வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென் மரவகை.
02. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப் படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணம் உடையவை.
03. வெள்ளைப் பூ உடையது அகத்தி என்றும் சிவப்புப் பூ உடையது செவ்வகத்தி என்றும் அழைக்கப்பெறும்.
04. இக்கீரை இடுமருந்தை முறிப்பதுபோல, மற்ற மருந்துகளின் செய்கைகளையும் கெடுக்குமாதலால் நோயாளிகளுக்கு மருந்தூட்டுங் காலத்தில் இது நீக்கப்படுகிறது.
05. மற்றக் காலங்களில் நாள்தோறுமின்றி, வேண்டும் போது அகத்திக் கீரையைக் கறியாகச் சமைத்துண்ண இது
உடலில் எழும் பித்தத்தைத் தணிக்கும்.
06. அகத்தியானது உணவைச் செரிப்பிக்கும். இடுமருந்தின் தோடத்தை நீக்கும். குளிர்ச்சியுண்டாக்கும். மலமிளக்கும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.
07. அகத்திக் கீரையின் சாற்றைப் பிழிந்து மூக்கில் இரண்டொரு துளி விட, நான்காம் முறைக் காய்ச்சல் விலகும்.
08. மற்றைய சுரங்களில் அகத்திக் கீரைச் சாறினை உடம்பின் மேல் பூசிவர, வெப்பம் தணியும். தலையிற் பூசித் தலை முழுக வெறி நீங்கும்.
09. அகத்திக் கீரையை அவித்து அரைத்துக் காயங்களில் வைத்துக் கட்டுப் போடலாம். கட்டலாம்.
10. அகத்திப் பூச் சாற்றைக் கண்ணில் பிழிய கண் நோய் போகும். இலையைச் சமைத்து உண்பது போல், இதன் பூவையும் சமைத்து உண்ண``, வெயில், புகையிலை, சுருட்டு முதலியவைகளால், பிறந்த பித்த குற்றம், உடலில் தோன்றும் வெப்பம் தணியும்.
11. அகத்தி வேர்ப் பட்டையை விதிப்படி ஊறல் அல்லது குடிநீராகச் செய்து உட்கொள்ள மேகம், நீர்வேட்கை, உடல் எரிச்சல், கை எரிச்சல், ஆண்குறியினுள் எரிவு ஆகியவை
போக்கும்.
12. அகத்தி மரப் பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கை எரிச்சல், உள்ளங்கால்
எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த் தாரை எரிவு, அம்மைச்
சுரம் ஆகியவை நீங்கும்.
13. அகத்திக் கீரைச் சாறு, அகத்திப் பூச் சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் தும்மல் நீங்கும் (160)
14. அகத்தி இலையை நீரில் போட்டு அவித்து,
அந்த நீரை அருந்தி வந்தால் வாய்ப் புண்கள் ஆறும். (213)
15. அகத்திக் கீரை அல்லது மணித் தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் வாய்ப் புண்கள் இரண்டு நாளில் குணமாகும். (259)
16. அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, காலை மாலை ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் சரியாகும். (356)
17. அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியிலும் உச்சந் தலையிலும் தடவினால் தலைவலி சரியாகும். (399)
18. அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இரத்தக் கொதிப்பு ஏற்படாது. (531)
19. அகத்திக் கீரை, சுண்டை வற்றல் போன்ற கசப்பு உணவுப் பொருள்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். (548)
20. அகத்திக் கீரை உணவு குடல் புண் குணமாகவும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் மிகச்சிறந்த உணவுப் பொருள் ஆகும். (686)
21. அக்த்திக் கீரையை வேக வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் கடுமையான வயிற்று வலி கூட குணமாகும்.(703)
22. அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.(956)
23. அகத்திமரப் பட்டையையும், அகத்திமர வேர்ப் பட்டையையும் எடுத்து கசாயம் வைத்துக் கொடுத்து வந்தால் அம்மைக் காய்ச்சல் தீரும்.(194)
24. அகத்தி வேரையும் அறுகம் புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கசாயம் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.(482)
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்மூலிகை
வலைப்பூ.
[தி.பி:2052,மேழம் (சித்திரை)21]
{04-05-2021}
அகத்தி |
![]() |
அகத்தி |