இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

அம்மான் பச்சரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மான் பச்சரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

அம்மான் பச்சரிசி

       மூலிகைப் பெயர்........................அம்மான் பச்சரிசி

       மாற்றுப் பெயர்கள்....................சித்திரப் பாலாடை

       தாவரவியல் பெயர்..................... EUPHORBIA HIRTA

       ஆங்கிலப் பெயர்.......AUATRALIAN ASTHMA WEED

       சுவை..................................................................துவர்ப்பு

       தன்மை..............................................................குளிர்ச்சி

===========================================


01. அம்மான் பச்சரிசி ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறு செடி. எதிர் அடுக்கில் கூர் நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளை உடையது. பால் உள்ளவை.

 

02. அம்மான் பச்சரிசிச் செடியில் பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆகியவை.

 

03. அம்மான் பச்சரிசியில் பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரசி, சிவப்பு அம்மான் பச்சரிசி, வெள்ளை அம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி என்ப் பல வகை உள்ளன.

 

04. பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, மைச்சல் ஆகியவை போகும்.

 

05. அம்மான் பச்சரிசி வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும் மலமிளக்கியாகவும் வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும்.

 

06. அம்மான் பச்சரிசி இலையைச்  சமைத்து உண்ண வறட்சி அகலும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, ரணம் தீரும்.

 

07. அம்மான் பச்சரிசியை துதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட, தாது, உடல் பலப்படும்.

 

08. அம்மான் பச்சரிசிச் செடியை பூவுடன் பறித்து 30 கிராம் எடுத்து அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு பாலில் கரைத்து ஒரு வாரம் கொடுக்க, தாய்ப் பால் பெருகும்.

 

09. அம்மான் பச்சரிசி பாலைத் தடவிவர நகச்சுற்று, முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும்.

 

10. கீழாநெல்லியுடன் அம்மான் பச்சரிசி இலை  சமன் அளவு சேர்த்து காலை, மதியம், இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும்.

 

11. அம்மான் பச்சரிசி இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்து, பசும்பாலில் கலக்கி, காலையில் மட்டும் 3 நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப் போக்கு, மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.

 

12. அம்மான் பச்சரிசிச் செடியை வேருடன் பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து. இரண்டு வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து காலை மாலையாக ஏழுநாட்கள் வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் தாய்ப்பால் நன்கு ஊறும்.

 

13. அம்மான் பச்சரிசி இலைப் பொடியை அரை தேக்கரண்டி எடுத்து  பாலில் கலந்து காலை மாலை இரு வேளைகளாகச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், தொண்டைப் புண், ஈறு வீக்கம், ஆகியவை குணமாகும்.(254)

 

14. அம்மான் பச்சரிசி இலைகளைத் துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து பகல் உணவுடன் 7 நாட்கள் உண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.(650)

 

15. அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து சுண்டைக்காய் அளவுக்கு மட்டும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களது வயிற்றுப் புண் சரியாகும்.(721)

 

16. அம்மான் பச்சரிசி இலைகளைத் தூதுவேளை இலைகளுடன் சேர்த்து உணவாக உட்கொண்டு வந்தால் உடல் வலிமை பெறும்.(757)

 

17. அம்மான் பச்சரிசி, கையாந்தரை, தும்பை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து கோலிக் குண்டு அளவு எடுத்து தேன் கலந்து உட்கொண்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.(1093)

 

18. அம்மான் பச்சரிசிப் பாலை எடுத்து பருக்கள் மீது தடவி வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.(834)

 

19. அம்மான் பச்சரிசிப் பாலை காலில் முள் குத்திய இடத்தில் தடவி வந்தால், இரண்டொரு நாளில் அந்த இடம் கனிந்து இளகும். இந்த நிலையில் பக்கத்தில் அழுத்தினால், முள் எளிதாக வெளியே வந்துவிடும்.(1160)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !  

==============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

==============================================

அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி



அம்மான் பச்சரிசி