இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

நொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 மே, 2021

நொச்சி

 

    மூலிகைப் பெயர்.......................................................நொச்சி

   

     மாற்றுப் பெயர்கள்...................இந்திரசூரியம், நித்தில், ,  

   

     ........................................................வாய்வாலி, நெர்க்குண்டி

   

     ....................................................................................சிந்துவாரம்

   

     தாவரவியல் பெயர்...................................VITEX NEGUNDO

   

     ஆங்கிலப் பெயர்.............................................CHASTE TREE

   

     சுவை...........................................கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு

              

     தன்மை.........................................................................வெப்பம்

 

 ==================================================

 

01.  நொச்சியானது மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளை எதிரடுக்கில் பெற்ற சிறு மரம். இலைகள் வெகுட்டல் மணம் உடையவை. கிளைகளின் நுனியில் ஊதா நிறப் பூங்கொத்துகளை உடையது.

 

02.  நொச்சியில் வெள்ளை நிற நொச்சி, கருநிற நொச்சி என இரண்டு வகை உண்டு.

 

03.  நொச்சியின் இலை,பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவக் குணங்கள் உடையவை.

 

04.  நொச்சி இலையை மெல்லிய துணியில் திணித்து தலையணையாகப் பயன்படுத்தினால், மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்பு வலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) தீரும்.

 

05.  நொச்சி இலைச்சாறு 5 மி.லி.,பசுங்கோமியம் 5 மி.லி. கலந்து சாப்பிட, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குறையும்

 

06.  நொச்சி இலையைக் குடிநீர் செய்து வளிச் சுரங்களுக்குக் கொடுக்கலாம். குளிர் சுரம், முறைச்சுரம் ஆகியவை தீரும்.

 

07.  நொச்சி இலையை அரிசிக் கஞ்சியுடன் அரைத்து புண்களுக்கு மருந்தாகப் போடலாம். இலை சாறினால் புண்ணைக் கழுவிய பின் இம்மருந்தைப் போட வேண்டும்.

 

08.  வெந்நீரில் நொச்சி (வெள்ளை நொச்சி) இலையப் போட்டு வேகவைத்து நீராவி பிடிக்க, வியர்வை உண்டாகி சுரம் தணியும். வளிக்குற்றத்தால் உண்டான உடல் வலி தீரும். (186)

 

09.  ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாறில் ஒரு கிராம் மிளகுத்தூள், மற்றும் சிறிது நெய் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் ஆகியவை குணமாகும் .மருந்து சாப்பிடுகையில் உணவுக் கட்டுப் பாடு அவசியம்.

 

10.  நொச்சி மற்றும் உத்தாமணி இலைகளை வதக்கி ஒற்றடம் கொடுத்தாலும் மூட்டு வலி, இடுப்பு வலி தீரும்.

 

11.  நொச்சி இலையைச் சுக்குடன் சேர்த்து அரைத்து நெற்றிப்பொட்டில் பற்றுப் போட்டால் தலைவலி தீரும்.

 

12.  நொச்சி வேரைக் குடிநீர் செய்து  கொடுத்தால் வளியை (வாதம்) போக்கி நீர்ப்பை அழற்சியை நீக்கும். இதை வயிற்று வலி, வயிற்றுப்புழு நோய் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம்.

 

13.  நொச்சியின் உலர்ந்த இலைகளை நெருப்பிலிட்டுப் புகை போட்டால், கொசுக்கள் விலகி ஓடிவிடும். 

 

14.  இரண்டு லிட்டர் நீரில் ஒரு பிடி நொச்சி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மண்டை நீரேற்றம் குணமாகும்.

 

15.  வெந்நீரில் ஒரு பிடி நொச்சி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த நீரில் குளித்தால் உடல் அசதி  தீரும்.

 

16.  கரு நொச்சியும் வெண் நொச்சியைப் போன்றே அனைத்து மருத்துவக் குணங்களும் கொண்டவை.

 

17.  நொச்சிச் சாறினைப் பூசி வந்தால் மூட்டு வலி, சதை வீக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.  (1770)

 

18.  நொச்சி இலைச் சாற்றினை மூட்டு வலி, சதை வீக்கம், நரம்பு பிசகு ஆகியவற்றுக்குப் பூசி வரலாம்.  (303) (2014)

 

19.  நொச்சி இலைச் சாறு, மிளகுத் தூள் ஆகியவற்றுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி தீரும்.  (1441)

 

20.  நொச்சி இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை வதக்கி ஒற்றடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி தீரும்.  (1442)

 

21.  நொச்சி இலை 50 கிராம், மருதாணி இலை 50 கிராம், எருக்கம் பூ 2 சேர்த்து மைய அரைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டினால், நகச் சுற்று நீங்கும்.  (316) (1948)

 

22.  நொச்சி இலையைக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு செங்கற்களை அதில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, தலை பாரம் நீங்கும்.  (404)

 

23.  நொச்சி இலையை உப்புப் போட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் நீங்கும்.  (409)

 

24.  நொச்சி இலை அடைத்த தலையணையில் தலை வைத்துப் படுத்தால் மண்டைக் குடைச்சல் தீரும்.  (414) (2000)

 

25.  நொச்சிக் குடிநீர் தயாரித்து காலை மாலை இரு வேளைகள் சிறிதளவு கொடுத்து வந்தால் ஆரம்ப நிலை இளம் பிள்ளை வாதம் குணமாகும்.  (1116)

 

26.  நொச்சி இலை, மூக்கிரட்டை வேர், காக்கிரட்டை வேர் சிதைத்து சுக்கு, மிளகு சேர்த்து கசாயம் செய்து 30 மி.லி கொடுத்து வந்தால் இளம் பிள்ளை வாதம் குணமாகும்.  (1439)

 

27.  நொச்சி இலைக் கசாயம் ஒரு வாரத்திற்கு தினசரி இரண்டு வேளை வீதம் கொடுத்து வந்தால் இளம் பிள்ளை வாதம் தீரும்.  (1737)

 

28.  நொச்சி இலை 2, இலவங்கம் 1, மிளகு 4, பூண்டுப் பல் 4,  ஆகியவற்றை மென்று விழுங்கி வந்தால் ஆஸ்துமா தீரும்.  (1440)

 

29.  நொச்சி இலைச் சாறு, பசுங்கோமியம் ஆகியவற்றைக் கலந்து 5 மி.லி எடுத்து காலை மாலை சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரை, நுரையீரல்  வீக்கம் குறையும். (980) (985) (1443) (2007)

 

30.  நொச்சி இலைகளை வீட்டில் வைத்திருந்தால் சில்லரைப் பூச்சிகள் சேராது.  (1750)

 

31.  நொச்சி இலைகள் ஒன்று அல்லது இரண்டை சேர்த்து  மருதாணியுடன் அரைத்தால், மருதாணி போட்டுக் கொள்ளும் போது சளி பிடிக்காது.  (1947)

 

32.  நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, சற்று நேரம் வைத்திருந்து, இறக்கி பொறுக்கும் சூடு நிலைக்கு வந்தவுடன் அதில் குளித்து வந்தால், வாதத்தால் ஏற்படும் உடல் வலி தீரும்.  (2006)

 

33.  நொச்சித் தைலம் சிறிது எடுத்து வெந்நீரில் இட்டு வாரம் இருமுறை  குளித்து வந்தால் கழுத்து வலி, மண்டை வலி, பொட்டு வலி ஆகியவை தீரும்.  (415)

 

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )11]

25-05-2021}

====================================================
நொச்சி


நொச்சி


நொச்சி


நொச்சி


நொச்சி