இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

கரிசலாங்கண்ணி

 

        மூலிகைப் பெயர்...................................கரிசலாங்கண்ணி

        மாற்றுப் பெயர்கள்......................கையான், பொற்றலை,

       ....................கையாந்தகரை, கரிசாலை, கையாந்தகரை,

        .............................கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை,

        ..................................................................கரிப்பான், கையான்,

        ...........................................பொற்கொடி (ECLIPTA PROCENA)

        தாவரவியல் பெயர்..................ECLIPTA PROSTRATA ROXB

        தாவரக் குடும்பம்................................................ASTERACEAE.

        வகை...............................நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை

        சுவை.................................................................................கைப்பு

        தன்மை..........................................................................வெப்பம்

====================================================

01.  கரிசலாங் கண்ணியானது எதிரடுக்கில் இலைகள்  அமைந்த வெள்ளை நிற மலர்கள் / மஞ்சள் நிற மலர்கள்  உடைய மிகக் குறுஞ் செடி இனம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு.

 

02.  கரிசலாங் கண்ணிப் பூக்கள் 4 - 5 இதழ்கள்  கொண்டிருக்கும், பூவடிச்சிதல், அடுக்குத் தட்டு மணி வடிவமானது.

 

03.  கரிசலாங் கண்ணியில் மஞ்சள் நிற மலர்களை உடைய ஓர் இனமும் உண்டு. இது மஞ்சள் கரிசலாங்கண்ணி.

 

04.  கரிசலாங் கண்ணியில் பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும் (சமூலம்)  

 

05.  கரிசலாங்கண்ணி, குரலுறுப்பு நோய், காமாலை, குட்டம், வீக்கம், பாண்டு, பல்நோய், ஆகியவற்றை குணமாக்கும்.

 

06.  மஞ்சள் ( பொற்றலை ) கையாந்தகரை உடலுக்குப் பொற்சாயலையும், விழிக்கு ஒளியையும், புத்திக்குத் தெளிவையும் உண்டாக்கும். குன்மக் கட்டியைப் போக்கும். செந்தூரம் செய்யப் பயன்படும்

 

07.  கரிசலாங் கண்ணி இலைச்சாறு 5 மி.லி எடுத்து, அதோடு மோர் சேர்த்துச் சாப்பிட பாம்பின் கடி நஞ்சு தணியும்.

 

08.  கரிசலாங் கண்ணி இலைச்சாறு 2 துளி எடுத்து 5 துளி தேனிற் கலந்து கைக் குழந்தைகளுக்குக் கொடுக்க, நீர்கோவை, சளி ஆகியவை நீங்கும்,

 

09.  கரிசலாங் கண்ணி இலைச் சாற்றை 3 துளி காதில் விட்டால் காது வலி நீங்கும்.

 

10.  கரிசலாங் கண்ணி இலையை அரைத்துக் கொதிக்க வைத்து தேள் கடிக்கு, கடித்த இடத்தில் நன்றாகத் தேய்த்து, அதையே அவ்விடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு நீங்கும்

 

11.  கரிசலாங் கண்ணி இலைச் சாற்றை சம அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து, காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி கறுத்து தழைத்து வளரும்.

 

12.  மஞ்சள் அல்லது வெள்ளைக் கரிசலாங்கண்ணிச் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதே அளவு கறிவேப்பிலை இலைகளையும் எடுத்து பத்து நாள் நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்ய வேண்டும். இத் தூளில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் ஊற்றி விழுங்க வேண்டும். காலையில்  வெறும் வயிற்றிலும், மதியம் உணவுக்கு முன்பும், இரவு உணவுக்குப் பின்பும் சாப்பிடவேண்டும் இவ்வாறு 48 நாள் சாப்பிட்டு வர வேண்டும். மருந்து சாப்பிட்ட பின் காலையில் ஒரு கைப்பிடி அளவு குப்பை மேனி இலைகளை கரண்டியில் போட்டு வதக்கி, கேழ்வரகு மாவில் கலந்து அடை சுட்டுச் சாப்பிடவேண்டும். இவ்வாறு ஒரு மாதம்செய்து வந்தால் ஆஸ்துமா குறையத் தொடங்கும். தொடர்ந்து மூன்று மாதம் மருந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நீங்கிவிடும்.. ஆனால், குளிர்ச்சியான உணவுகளையும், மாமிச உணவையும் முட்டையையும் அறவே தொடக்கூடாது. பலாப்பழம் ஆகவே ஆகாது.

 

13.  மஞ்சள், வெள்ளை என இரு வண்ணங்களில் பூக்கும் கரிசலாங் கண்ணிகள் உள்ளன. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன.

 

14.  கரிசலாங் கண்ணியின்  பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரப்பிகளைத் தூண்டுகிறது.

 

15.  கரிசலாங் கண்ணி உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்துக்களை உடையது.

 

16.  காமாலை எதுவாயினும் கரிசலாங் கண்ணி குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

 

17.  தொந்தி கரைய -: கரிசலாங் கண்ணியைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

 

18.  மஞ்சள் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

 

19.  காமாலை சோகை -: கரிசலாங் கண்ணியில்  மஞ்சள் பூவுடைய செடியின் இலை 10, வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு, துளசி 4 இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் குணமாகும்.

 

20.  ஆஸ்த்துமா, சளி -: கரிசாலைச் சாறு + எள் நெய் (நல்லெண்ணெய்) வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதிமதுரம் 100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காய்ச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா, சளி, இருமல், குரல் கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

 

21.  கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

 

22.  குழந்தை இருமல் -: கரிசலாங் கண்ணிச் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.

 

23.  காது வலி -: கரிசலாங் கண்ணிச் சாறு இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டால்  காதுவலி தீரும்.

 

24.  பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் கரிசலாங் கண்ணிச்  சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விஷம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு கரிசலாங் கண்ணி இலையைத் தின்னவும். அதை அரைத்துக் கடிவாயிலும் கட்டவும். தேள் விஷம் இறங்கும்.

 

25.  நாள்பட்ட காமாலை -: கரிசலாங்கண்ணீச் சாறு முதல் நாள் காலை 10 மி.லி. எனத் தொடங்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 மி.லி என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது. மோரில் சாப்பிடவும்.

 

26.  குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

 

27.  முடிவளர -: எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையில் கரிசலாங் கண்ணி இலையை அரைத்துப் போட்டு சூரிய ஒளியில் 8 நாள் வைத்திருந்து வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

 

28.  கரிசாலை சுட்டெரித்த சாம்பல் மையை நெற்றியில் வைத்து கற்பூர தீபம் காட்டி "யவசிவய" மந்திரம் கூறி திருநீறு கொடுத்தால் அதை அணிந்தவர் வசியமாவார்.

 

29.  கரிசலாங் கண்ணி வேர் வாந்தியுண்டாக்கும். , நீர்மலம் போக்கும். வேர், ஆடுமாடுகளுக்கு உண்டாகும் குடல் புண் மற்றும் வெளிப் புண்ணை ஆற்றும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப் படுகிறது.

 

30.  கரிசலாங் கண்ணியால்  குரலுறுப்பு நோய், குணமடைந்து  குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர்ப் பொடி தோலைப் பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம் கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம் பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து  (கரிசாலைத் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரத தலைவலி,    பித்தக் கிறுகிறுப்பு, உடல் வெப்பம், பீனிசம், காது, ண் நோய்கள் தீரும்.

 

31.  கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின் சமன் சூரணம் கலந்து நாள் தோறும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும்.

 

32.  கரிசலாங்கண்ணி,பழம்புளி. மஞ்சள். ஆகியவை சேர்த்து அரைத்து சுண்டைக் காயளவு எடுத்து 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருப்பை இறக்கம் சரியாகும் (636)

 

33.  கரிசலாங்கண்ணிக் கீரையைச் சமைத்து ஊண்டு வந்தால் மகோதரம் சரியாகும்.(730)

 

34.  கரிசலாங்கண்ணிக் கீரையை இடித்துச்  சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் (30 மி.லி.) எடுத்து மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி உள்பட அனைத்து விஷங்களும் இறங்கும். (870)

 

35.  கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து சாறு பிழிந்து ஆட்டுப் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் விஷத்தினால் ஏற்படும்  கடுப்பு நீங்கும் (882)

 

36.  கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, கீழாநெல்லி இலை ஆகியவை சம அளவு எடுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு எடுத்து மோரில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை தீரும். (1086)

 

37.  கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, தும்பை இலைகளை சம அளவு எடுத்து அரைத்து 10 நாட்கள் மோரில் கலந்து அருந்தி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1091)

 

38.  கரிசலாங்கண்ணித் தூள், மருதம் பட்டைத் தூள் ஆகியவை தலா ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.(1467)

 

39.  கரிசலாங்கண்ணி இலைச் சாறில் வில்வ இலைப்பொடி கலந்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.(1533)

 

40.  கரிசலாங்கண்ணிப் பொடி, வேப்பிலைப் பொடி, துளசிப் பொடி, கீழாநெல்லிப் பொடி ஆகியவற்றைக் கலந்து ஒரு தேக்கரண்டி எடுத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உப்புச் சத்து குறையும். (1766)

 

41.  கரிசலங்கண்ணிக் கீரையைத் தொடர்ந்து உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் ஈரல் நோய்கள் குணமாகும். (1870)

 

42.  கரிசலாங்கண்ணி வேர், நாயுருவி வேர்  இரண்டையும் உலர்த்தி பொடியாக்கி தினசரி ஒரு தேக்கரண்டி எடுத்து பால் சேர்த்து அருந்தி வந்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும்..(972)

 

43.  கரிசலாங்கண்ணிச் சாறு, துளசிச் சாறு இரண்டும் கலந்து இரண்டு மூன்று துளிகள் காதில் விட்டு வந்தால், காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியவை நிற்கும்.(308)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

====================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021} 

====================================================

கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக