இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

இஞ்சி

 

       மூலிகைப் பெயர்..............................................................இஞ்சி          

       மாற்றுப் பெயர்கள்..............................அல்லம், ஆர்த்தரகம்

       .....................................................ஆத்திரகம்,..இலாக்கொட்டை

       தாவரவியல் பெயர்.............................ZINGIBER OFFICINALE

       ஆங்கிலப் பெயர்.........................GINGER PLANT ( OR BULB )

       சுவை...................................................................................கார்ப்பு

           

       தன்மை............................................................................வெப்பம்

     

      ====================================================

 

01. மணமுள்ள கிழங்குகளை உடைய சிறு செடி. கிழங்குகளே மருத்துவப் பயன் உடையவை. உலர்த்திப் பதப்படுத்தப் பட்ட கிழங்குகள் சுக்கு எனப்படும்

 

02. வியர்வைப் பெருக்கி, உமிழ்நீர்ப் பெருக்கியாகவும், பசித் தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயற்படும்.

 

03. இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 30 மி.லி எடுத்து 15 மி.லி தேன் கலந்து ஒருதடவைக்கு 15 மி.லி அளவாக அடிக்கடிக் கொடுத்து வந்தால், ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம், தீரும். வெங்காயச்சாற்றுக்குப் பதிலாக எலுமிச்சைச் சாற்றையும் பயன்படுத்தலாம். 

 

04. இஞ்சி 200 கிராம் எடுத்துத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் போட்டு, 4 நாள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாள் ) சாப்பிட, உடல் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து, ஆயுள் பெருகும். நெஞ்சு வலிமையும்  மனத்திடமும் பெற்று முகப் பொலிவும் அழகும் உண்டாகும். இது ஒரு கற்ப மருந்து.

 

05. இஞ்சி 10 கிராம், வெள்ளெருக்கம் பூ 3, மிளகு 6, இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிக் காலை மாலை குடித்து வர, ஆஸ்துமா இரைப்பு, நுரையீரல் சளி அடைப்பு ஆகியவை தீரும்.

 

06. முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து, சம அளவு பசும்பால் கலந்து, இக்கலவைக்குச் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமுறக் காய்ச்சி வடித்து ( இஞ்சித் தைலம் ) வாரம் இருமுறை தலையிலிட்டுக் குளித்து வர நீர்க்கோவை, நீர்ப்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்பு இசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் தீரும்.

 

07. இஞ்சியை வாயில் போட்டு மென்று  உமிழ்நீரைத் துப்ப  தொண்டைப் புண்,  குரல் கம்மல், இவைகள் குணப்படும். உண்ட உணவு செரிக்காமல் பேதியானால், இஞ்சிச்சாற்றைத் தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

 

08. இஞ்சிக் கிழங்கை ஊறுகாய், தேன் ஊறல், வெல்ல பாகு ஊறல், பழச்சாறு ஊறல் என பல்வகையாகச் செய்து உட்கொள்ள வயிற்று நோய்கள் குணமாகும்.

 

09. வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல் நோய் முதலிய நோய்கட்கும் இதைத் தேனூறல் செய்து கொடுக்கலாம்.

 

10. இஞ்சிச் சாறுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து வேளைக்கு 25 மி.லி வீதம் பருகினால் பருகினால் வாந்தி உடனே நிற்கும்.(101)

 

11. இஞ்சிச் சாறும் துளசிச் சாறும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து வேளைக்கு 25 மி.லி வீதம் சாப்பிட்டால் நீர்க் கோவை (ஜலதோஷம்) நீங்கும். (108)

 

12. இஞ்சிச் சாறு, மாதுளம் பழச் சாறு வகைக்கு 15 மி.லி எடுத்து ஒன்றாகக் கலந்து 15. மி.லி தேன் சேர்த்து மூன்று வேளை அருந்தினால் இருமல், இரைப்பு தீரும். (121)

 

13. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து வாயில் ஊற்றிக் சற்று நேரம் கொப்பளித்து பின்னர் விழுங்கி வந்தால் சொத்தைப் பல் சரியாகும்.(224)

 

14. இஞ்சிச் சாறும் வெள்ளைப் பூண்டின் சாறும் தலா 15 மி.லி எடுத்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் தீராத வாந்தியும் தீரும்.(294)

 

15. இஞ்சிச் சாறு, தேன்  ஆகியவை வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.(567)

 

16. இஞ்சி, சீரகம், கறிவேப்பில மூன்றையும் ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி பருகினால் செரியாமை நீங்கும்.(666)

 

17. இஞ்சிச் சாறினை வயிற்றில் தொப்புளைச் சுற்றிப் பூசினால் பேதி நின்று விடும்.(1222)

 

18. இஞ்சியை தோலை நீக்கி ஒரு சிறு துண்டு எடுத்து வாயில் இட்டு மென்று தின்றால் குரல் கம்மல் நீங்கிவிடும். (1223)


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

 

        ===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 


        ====================================================
இஞ்சி

இஞ்சி




இஞ்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக