மூலிகைப் பெயர்.......................எழுத்தாணிப் பூண்டு
மாற்றுப் பெயர்கள்...................முத்தெருக்கன் செவி
தாவரவியல் பெயர்....................................COMPOSITAE
ஆங்கிலப் பெயர்.......... PRENANTHES SARMENTOSUS
===================================================
01. குச்சி போன்ற நுனி. வளைந்த உயரமான பூங்கதிர். குறுஞ்செடி வகையைச் சேர்ந்தது. தரையோடு ஒட்டி வளரக் கூடியது.
02. இதன் பூங்கதிரானது வழு வழுவென்று காணப்படும். இதன் தோற்றம் நாயுருவி போன்று இருக்கும். .இதன் பூங்கதிர்கள் எழுத்தாணி போன்று காணப்படுவதால் இதற்கு எழுத்தாணிப் பூண்டு என்று பெயர்.
03. எழுத்தாணிப் பூண்டின் இலைகளை இடித்துச் சாறெடுத்து சம அளவு எள் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி, வடிகட்டி தினமும் காலை மாலை சொறி,
சிரங்கு, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை நீங்கிடும்.
04. எழுத்தாணிப் பூண்டின் இலைகளுக்கும் நாயுருவி இலைகளைப் போன்றே மூலப் புண்களை ஆற்றும் தன்மை உண்டு.
05. எழுத்தாணிப் பூண்டின் [ பத்து
அல்லது பதினைந்து ]
இலைகளைப் பறித்து விளக்கெண்ணை விட்டு வதக்கி அல்லது வதக்காமல் மோர் விட்டு அரைத்து நெல்லிகாய் அளவு உருட்டி தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ஆசன வாயில் தோன்றிய புண்கள் ஆறும். அத்துடன் மலச் சிக்கலும் நீங்கும்.
06. தொடை இடுக்கு மற்றும் விரல்
இடுக்குகளில் தோன்றும் சொறி, சிரங்கு நீங்கிட எழுத்தாணிப் பூண்டின் இலைச் சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி பாதிக்கப் பட்ட இடங்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின்பு அரப்புத்
தூள் அல்லது சீயக்காய்த் தூள் கொண்டு குளித்து வர வேண்டும்.
07. எழுத்தாணிப் பூண்டின் வேர்
இரண்டு துண்டுகள் எடுத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து அரைத்து கலக்கி வடிகட்டி தினமும் 2 வேளைகள் உணவுக்குப் பின் குடித்து வந்தால் பெண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகப்படும். (1701)
08. எழுத்தாணிப் பூண்டு இலைகளை நன்கு அரைத்து கோலிக்குண்டு அளவு உள்ளுக்குக் கொடுத்து வந்தால் தாரளமாக மலம் வெளியேறும். குடலில் நிலவும் வெப்பம் நீங்கும். இதனால் குடற் புண்கள் ஆறும்.(679)
09. எழுத்தாணிப் பூண்டு இலையைப் பறித்து வந்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி, உடம்பில் பூசி வந்தால் சொறி சிரங்குகள் காணாமற் போகும்.(1715)
10. எழுத்தாணிப் பூண்டின் வேர் எடுத்து வந்து பாலில் கரைத்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் தோன்றும் மருவு,
கரப்பான், பிளவை ஆகியவை மறைந்து விடும். (1727)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
===================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
===================================================
எழுத்தாணிப் பூண்டு |
எழுத்தாணிப் பூண்டு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக