மாற்றுப்பெயர்கள்............ மேகாரி, தலபோடம்
....................ஆகுலி ஆவிரை, ஆவரை, ஏமபுட்பி
தாவரவியல் பெயர்............. CASSIA
AURICULATA
ஆங்கிலப் பெயர்....................... TANNER’S
CASSIA
சுவை............................................................. துவர்ப்பு
தன்மை........................................................ குளிர்ச்சி
01. பளிச்சிடும் மஞ்சள்
நிறப் பூக்களை உடைய அழகிய குறுஞ்செடி. மெல்லிய தட்டையான காய்களை உடையது. இலைகள் புளிய இலை போன்ற
அமைப்பு உடையவை. ஆனால் புளிய இலையை விடச் சற்றுப் பெரியவை.
02. ஆவாரையின் இலை, பூ, பட்டை, விதை, வேர், பிசின் அனைத்துமே
மருத்துவக் குணம் உடையவை.
03. ஆவாரைச் சமூலம் ( வேர் உள்பட முழுச் செடி ) ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என்னும் ஐந்து
உறுப்புகளால், வெள்ளை, உட்சூடு, புண், வெளி நிணக் கழிச்சல், எலும்பைப் பற்றிய
சுரம், நீர் வேட்கை ஆகியவை போகும்
04. ஆவாரம் பூவானது நீரிழிவைப் போக்கும். வறட்சி, உடம்பிற் பூத்தவுப்பு, கற்றாழை நாற்றம் இவைகளை
நீக்கும். உடம்பிற்கு
பொற்சாயலைத் தரும்
05. ஆவாரம் பிசினானது நீரிழிவு, வெள்ளை முதலிய சிறு நீர்க் கேடுகளைப் போக்கும்
06. ஆவாரை இலை குளிர்ச்சி
உடையது. வெயிலில் வெகுதூரம்
நடப்பவர்கள் இதைத் தலையில் பரப்பி தலைப் பாகை கட்டிக் கொண்டால் வெயிலின் வெப்பம் தோன்றாது.
07. ஆவாரம் பூவை வதக்கிக்
கண்ணோய்க்கு ஒற்றடம் கொடுக்கலாம்.
08. இதைக் குடிநீராகச்
செய்து பால் சேர்த்து சாப்பிட்டால் சூடு தணியும். தினசரி 10 பூக்களை வாயிலிட்டு
மென்று தின்று வந்தால் நீரிழிவு குணப்படும்.
09. மணப்பாகு ( சர்பத் ) செய்து சாப்பிட, வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும்.
10. ஆவாரையின் துளிரை நன்கு அரைத்து, மோரில் கலந்து ஒரு மண்டலம் (48 நாள்) குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். (Harish)
11. பூவைச் சமைத்துச் சாப்பிட்டால், உடலில் தோன்றும் கற்றாழை நாற்றம் நீங்கும். வறட்சி குறையும். (Harish)
12. பூவைக் குடி நீர் செய்து பால் சேர்த்து தினசரி 60 மி.லி அருந்தி வந்தால் உடல் வெப்பம் தணியும்.
13. ஆவாரம் பூவைக் கசாயம் வைத்து, அதில் கருப்பட்டி சேர்த்து பாகு பதத்தில் எடுத்துக் கொண்டு, தினசரி 2 வேளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வந்தால் வெள்ளை படுதல் நீங்கும். (Harish)
14. காய்ந்த ஆவாரம் பூவைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு தயிருடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும். வறட்சி விலகும். (Harish)
15. காய்ந்த பூவுடன் கஸ்தூரி மஞ்சள், பாசிப் பயறு, வெட்டி வேர்ப் பொடி சேர்த்து குளித்து வந்தால், உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். உடல் சூடு தணியும். புத்துணர்ச்சி ஏற்படும். (Harish)
16. ஆவாராம் பூவைச் சமைத்து உண்டு வந்தால் உடல் அழகு கூடும். உடம்பில் பூக்கும் உப்பின் அளவு குறையும். (Harish)
17. பூவைத் தேனீர்போன்று செய்து அருந்தி வந்தால், நீரிழிவு கட்டுப் படும். (Harish)
18. ஆவாரை விதையை நெல்லிச் சாறு, நெருஞ்சில் சாறு, வாழைக் கிழங்குச் சாறு, சீந்தில் கொடிச் சாறு ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஊறவைத்து, காய்ந்த பிறகு, பொடி செய்து கொள்ள வேண்டும். இப்பொடியில் ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து, வெளியாகும். (Harish)
19. ஆவாரம் பட்டையைக் குடி நீரில் ஊற வைத்து, அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப் புண்கள் குணமாகும். (Harish)
20. ஆவாரை வேரினை எள் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, தலை முழுகி வந்தால், உடல் வெப்பம் தணியும். (Harish)
21. ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து, பொடித்து, 2 முதல் 4 கிராம் வரை தினசரி தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வெள்ளை படுதல், எலும்பைப் பற்றிய சுரம் ஆகியவை குணமாகும். (Harish)
22. ஆவாரம் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் இராது. (Harish)
23. (தொ.எண் 10 முதல் 22 வரை ஆதாரம்: டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன், M.D (s), முதன்மை மருத்துவ அதிகாரி, ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், வேலூர் அவர்களின் கட்டுரை, தினமலர், பெண்கள் மலர் நாள் 13-05-2017)
24. பூக்களுடன் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும். (Asan)
25. பூவை மாதம் இருமுறை பொரியல் செய்தும் சாப்பிடலாம். ஆனால் எண்ணெய் அதிகம் சேர்க்காதீர்கள்.. (Asan)
26. ஆவாரம் பூவைப் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை இருவேளை குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். (Asan)
27. ஆவாரம் பூவை உலர்த்தி, பூலாங்கிழங்கு மாவுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். (Asan)
28. ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, காலை மாலை இரு வேளைகள் கசாயம் செய்து அருந்தி வந்தால், நீரிழிவு கட்டுப்படும். (Asan)
29. பூவைக் காய வைத்து, சிகைக்காய், சிறு பயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, கூந்தல் நீளமாக வளரும். பொலிவும் கூடும். (Asan)
30. ஆவாராம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரைக் கிலோ, எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு, தேவையான போது இரண்டு தேக்கரண்டி மாவை எடுத்து வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலையில் தேய்த்து அலசி வந்தால், கரு கரு கூந்தலைப் பெறலாம். (Asan)
31. சிறிதளவு புதிய ஆவாரம்பூ, செம்பருத்திப் பூக்களை எடுத்து, தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து, குளித்து வந்தால், உடல் குளிர்ச்சியாகும். முடி கொட்டுவது நின்று, கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும். (Asan)
32. புதிய ஆவாரம் பூ 100 கிராம் எடுத்து அரைத்து, அடுப்பில் வைத்து, நீர்ப்பதம் போகும் வரைக் காய்ச்சி, கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து சீசாவில் வைத்துக் கொண்டு, தினமும் கொஞ்சம் எடுத்து தலையில் நன்றாகத் தடவி வாருங்கள். முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும். (Asan)
33. ஆவாரம் பூ, ஆவாரந் தளிர், ஆவாரம் பட்டை, ஆவாரம் வேர் ஆகியவற்றை சமனளவு எடுத்து நிழலில் உலர்த்தி, இடித்து, மெல்லிய வெள்ளைத் துணியில் சலித்து, சுத்தமான பசு நெய் கலந்து சூரணமாக 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உள்மூலம் குணமாகும். (Asan)
34. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன், அதே அளவு அருகம் புல்லை இடித்து சூரணம் செய்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, தினமும் காலை மாலை அரைத் தேக்கரண்டி எடுத்து பசு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் கட்டுப்படும். (Asan)
35. ஆவாரம் பூ 10 கிராம், மிளகு 5 , திப்பிலி 3 , சுக்கு ஒரு துண்டு, சிற்றரத்தை ஒரு துண்டு, இவற்றை எடுத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு குவளை நீரில் போட்டு, பாதியாக வற்றக் காய்ச்சி, காலையில் அருந்தி வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.. (Asan)
36. புதிய ஆவாரம் பூ 100 கிராம் எடுத்து அரைத்தி, நீர் விட்டுக் காய்ச்சி, அதெ அளவு பாதாம் எண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உடலில் தடவி வரலாம். கரும்புள்ளிகள், தோல் சுருக்கம் ஆகியவை நீங்கும். (Asan)
37. புதிய ஆவாரம் பூ 100 கிராம், கசகசா 50 கிராம், வெள்ளரி விதை 50 கிராம், ஆகியவை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும். அத்துடன் பால் சேர்த்து வாரம் இருமுறை பருகுங்கள். உடல் பள பளப்பாகும். (Asan)
38. பூவை நன்கு காயவைத்துப் பொடி செய்து தேன் கலந்து, தினமும் காலை வேளையில் சாப்பிட்டால், உடல் தங்கம் போல மின்னும்.. (Asan)
39. பூவை நிழலில் உலர்த்திப் பொடித்து, பனை வெல்லம், சுக்கு சேர்த்து கசாயமாகி தினமும் இரு வேளை அருந்துங்கள் உடலில் நறுமணம் வீசும். (Asan)
40. உலர்ந்த ஆவாரம் பூ 100 கிராம், பூலாங் கிழங்கு 100 கிராம், கோரைக் கிழங்கு கால் கிலோ, அனைத்தையும் வாங்கி அரைத்துப் பொடியாக்கி, தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். (Asan)
41. ஆவாரம் பூ, குப்பை மேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, முழங்காலுக்குக் கீழ் தினமும் பூசினால், நீரிழிவால் பதிக்கப்பட்ட கால் பகுதிக்கு உணர்ச்சி கிடைக்கும். (Asan)
42. ஆவாரைப் பாஞ்சாங்கத்தை (இலை, பூ, பட்டை, வேர், விதை) தினமும் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீருடன் பருகி வந்தால், சர்க்கரை நோய், உடல் சோர்வு, நாவறட்சி, அடங்காத தாகம், தூக்கமின்மை, உடல் இளைத்தல், உடல் எரிச்சல் ஆகியவை நீங்கும். (Asan)
43. ஆவாரம் பூவைக் கசாயம் வைத்து, பெண்கள் அருந்தி வந்தால், வெள்ளைபடுதல், நீங்கிக் குணம் பெறலாம். (Asan)
44. (தொ.எண் 23 முதல் 44 வரை ஆதாரம்:- நாகர்கோயில், எஸ்.மகாலிங்கம் ஆசான், 07-08-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கடுரை.)
45. ஆவாரம் பூவைப் பறித்து சுத்தம் செய்து ஐந்து எண்ணிக்கை அளவுக்கு எடுத்து தினசரி வாயில் இட்டு மென்று தின்று வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .(332)
46. ஆவாரம் பூ, கறிவேப்பிலை, நெல்லிகாய் ஆகியவற்றின் சாறு எடுத்து தினசரி 30 மி.லி. அளவுக்குப் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். (334)
47. ஆவாரம்பூ, அறுகம்புல் வேர் ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவுக்குப் பொடியை எடுத்து சிறிது பசு நெய்யுடன் சேர்த்து தினசரி சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் .(374)
48. ஆவாரம் பூக்கள் ஐந்து எடுத்து தினசரி மென்று தின்று வந்தால் சிறுநீர்ப் புறவழியில் ஏற்படும் புண்கள் ஆறும். (954)
49. ஆவாரை வேர், கொன்றை வேர், நாவல் பட்டை, கோரைக் கிழங்கு, கோஷ்டம் ஆகியவை சம அளவு எடுத்து இடித்து பொடி செய்து, தினசரி ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீரில் கலக்கிக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். நாளடைவில் குணமாகும். (337)
50. ஆவாரை விதையை எடுத்து, பொடி செய்து தினமும் இதில் ஒரு கிராம் அளவுக்கு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் காமம் பெருகும் .(470)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]
{30-04-2021}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக