இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 1 ஜூன், 2021

மிளகு

           மூலிகைப் பெயர்..........................................................மிளகு

         மாற்றுப் பெயர்கள்................ மலையாளி, குறுமிளகு

         ..........................கலினை, கறி, காயம், மரியல், மரீசம் ,

         .....................................மிரியாலு, மிரியம், மிரியாகொனு,

         ......................................................,,...........மெனசு, , கோளகம்.

         தாவரவியல் பெயர்.............,...,.....................PIPER NIGRUM

         ஆங்கிலப் பெயர்................,,,........................BLACK PEPPER

         வகைகள்...................................கரு மிளகு, வால் மிளகு

         பயன்தரும் பாகங்கள்....கொடி,இலை மற்றும் வேர்.


==========================================================


01.  மிளகு என்பது  பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் சிறு கொடி வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். நான்கு மீட்டர் உயரத்திற்கு மரத்தில் பற்றி வளரும். இலைகள் சிறிய வெற்றிலையைப் போன்று பசுமையான கணுக்களுடன் காணப்படும்..

 

02.  ஊசியைப் போன்று சிறு ஊதா நிற மலர்களையும், ஒரு சரத்துக்குச் சராசரியாக  முப்பது காய்களையும் கொண்டிருக்கும். காய்கள் பச்சையானாவை. உலர்ந்த கனிகள் கறுப்பானவை.

 

03.  மிளகை அதன் உலர்ந்த பழமாகவே (கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர்.

 

04.  வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறப்பு!

 

05.  மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது.

 

06.  சளி இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக அவசியம்.

 

07.  .மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும்.

 

08.  முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிகாக சுண்டி சிறுத்து மாறிவிடும். இதுவே மிளகாகும்.

 

09.  விட்டு விட்டு வருகின்ற முறை சுரம் நீங்க நொச்சிக் கொழுந்து

   மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை 

   ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் 

   வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.


10.  பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒற்றமிட நல்ல பலன் கிடைக்கும்.

 

11.  தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

 

12.  மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

 

13.  பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்பு  றுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

 

14.  சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

 

15.  மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

 

16.  சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

 

17.  சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

 

18.  மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பற்பொடி போல் நினைத்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

 

19.  மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். மிளகைப் பொடியாக்கி ஒரு அரிசி எடை அளவுக்கு எடுத்து மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும். (மூக்கில் எரிச்சல் ஏற்படலாம்!)

 

20.  மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2 - 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

 

21.  100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

 

22.  சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

 

23.  வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கரு கலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

 

24.  அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

 

25.  மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில் மெலிதாகத் தேய்க்க முடி வளரும்.

 

26.  மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில் குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.

 

27.  மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine, piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய மூலக்கூறுகள். piperine, piperidine இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும்.

 

28.  இருமல் இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சுவைத்து சாப்பிட இரைப்பும் குறையும். அசீரணமும் சீராகும்.

 

29.  மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.

 

30.  Urticaria எனப்படும் திடீர் திடீர் என ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி காலையில் அருகம்புல் (ஒரு கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும்.

 

31.  எந்த ஒரு சாதாரண தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி, சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது

 

32.  வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன் வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால் உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும்.

 

33.  உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

 

34.  இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்

 

35.  காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. 
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. 

 

36.  வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம். 

 

37.  ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். 

 

38.  தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி. 

 

39.  சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

 

40.   உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. 

 

41.  ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும். 

 

42.  பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். 

 

43.  மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி. 

 

44.  திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை 
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட 
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. 
மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

 

45.   மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும். 

 

46.  மிளகு ஊறுகாய்: 
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

 

47.  [ கருமிளகு ] பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது.

 

48.  [ வெண்மிளகு ] பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 

49.  [ பச்சைமிளகு ] கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.

 

50.  கால்சியம்,  இரும்பு,  பாஸ்பரஸ்  போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன

 

 

51.  மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.சளி, கோழை, இருமல், நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.

 

52.  மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும் சுரத்தையும்(காய்ச்சல்) போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

 

53.  மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும். நரம்புகளுக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற டானிக்காகும்.

 

54.  மிளகு கார்ப்புச் சுவை உள்ளது. கபத்தையும், வாதத்தையும் போக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இருமல் கிருமி நோய்களை போக்கும். தக்க படி பயன்படுத்தினால் இராசயனமாகும்.

 

55.  தீர்க்கும் நோய்கள் இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், தவிர நச்சுகளால் தோன்றும் துன்பம், கண்நோய் இவற்றை போக்கும்.

 

56.  பயன் இருமல் நிற்க மிளகுத்தூள், சர்க்கரை, நெய், தேன் இவற்றை கலந்து உண்டால் இருமல் நீங்கும். மிளகு கலந்த மருந்துகளான மரீச்யாதி தைலம். தேக ராஜமரீசம் இவைகளால், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி இவற்றை போக்கும்.

 

57.  ஜீரணத்திற்கு கருமிளகு வாய்வுத்தொல்லை, அஜீரணம் இவற்றை போக்கும்.

 

58.  மோருடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து குடிக்கலாம். இதனுடன் ஜீரகம் சேர்த்தால் இன்னும் நல்லது. மிளகு பசியை தூண்டும்.

 

59.  திரிகடுகம் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவில் கலந்த சூரணம் திரிகடுகம். இதை 2 கிராம் எடுத்து தேனுடன் சாப்பிட வாயுக்கோளாறை போக்கும். திரிகடுகம் மிக பழமையான, உபயோகமான சூரணம்.

 

60.  நஞ்சுகளை போக்க மிளகு எல்லா வித நஞ்சுகளையும் முறிக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி 5 – 6 மிளகை தூள் செய்து வெற்றிலையில் வைத்து, தேன் கலந்து, அப்படியே மென்று விழுங்கினால் எந்த நஞ்சும் பாதிக்காது.

 

61.  இருமல் நிற்க இருமலுக்கு கைகண்ட மருந்து மிளகு கஷாயம். இருமல் ஆரம்பித்தவுடனே வீட்டிலிருப்பவர்கள் செய்து கொடுக்கும் கஷாயம் இது. தொண்டை நோய்களுக்கும் மிளகு நல்லது. மிளகை அடிக்கடி உபயோகித்தால் குரல் வளம் பெருகும்.

 

62.  கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க மிளகில் உள்ள காப்சைன்கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 லிருந்து 10 மிளகை தூள் செய்து தண்ணீருடன் அருந்தவும். கொலஸ்ட்ராலை குறைப்பதால், மாரடைப்பு வராமல் காப்பதற்கு மிளகு நல்ல மருந்து என்ற தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 

63.  மறதிக்கு சிறிதளவு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து உண்ண மறதி குறையும். ஞாபக சக்தி பெருகும்.

 

64.  ஆண்மை குறைவுக்கு தினமும் 6 மிளகுகளுடன் 4 பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் உட்கொள்ள, ஆண்மை பெருகும். வயது முதிர்வை குறைக்கும்.

 

65.  ஜலதோஷம், ஜுரம், தலைவலிக்கு மிளகு கஷாயம் ஜலதோஷத்தை குறைக்கும். மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவில் சேர்த்து அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக செய்து கொள்ளவும். இதில் 2 – 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, காய்ச்சல் குணமாகும்.

 

66.  மிளகை சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, சளி குறையும்.

 

67.  மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

 

68.  ஜுரம் தணிந்த பின் வரும் பலவீனத்தை மிளகு போக்கும். சளி, தும்மல், ஆஸ்துமா இவற்றுக்கும் மிளகு கஷாயம் பயன்படுகிறது.

 

69.  மலேரியாவை மிளகு கட்டுப்படுத்தும்.

 

70.  தசை, மூட்டு வலிகளுக்கு எள் எண்ணெய்யில், மிளகுப்பொடியை வறுத்து இதை வலிக்கும் இடங்களில் தடவலாம், வலி குறையும்.

 

71.  பல், ஈறுவியாதிகளுக்கு மிளகுப் பொடியை உப்புடன் சேர்த்து பல் துலக்குவது வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி போன்றவற்றை குறைக்கும். பயோரியாவுக்கும் இந்த பற்பசைநல்லது.

 

72.  மிளகிலிருந்து எடுக்கப்படும் மிளகு தைலம் உணவுக்கு மணம் கூட்டவும் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படும். தவிர இந்த தைலம் ஜுரம் குறைய உதவுகிறது.

 

73.  பச்சை மிளகு மூலநோய், வாதநோய்களை கட்டுப்படுத்தும்.

 

74.  [ எச்சரிக்கை ] மிளகு உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் கரு கலையும்

 

75.  நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தேவையற்ற சுழற்சி, மந்த நிலை தூக்கமின்மை இவற்றை மிளகு சீராக்கும். கல்லீரலை பாதுகாக்கும்.

 

76.  மிளகு கலந்த உணவுகள் பசியை தூண்டும்.ஆப்ரிக்கா மிளகை உண்டால் அது உடலில் ஒரு வித திரவத்தை / ஒரு வித வாசனையை உண்டாக்குகிறது. இதனால் கொசுக்கள் கடிப்பதில்லை என்றும் நம்புகிறார்கள்.

 

77.  சீன மருத்துவத்தில் மிளகு, வாந்தி வருவதை தடுக்கவும், தலைசுற்றலை தவிர்ப்பதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

 

78.  மிளகில் உள்ள பைப்பரின் பைப்பரின் எனும் அல்கலாய்டு  மிளகில் உள்ள ஒரு கெட்டியான வேதிப்பொருள். இது தண்ணீரில் கரையாது. ஆயுர்வேதத்தில் மிகவும் பயன்படும் பொருட்களில் மிளகும் உண்டு. சீன வைத்தியத்தில், இந்த பைப்பரினலிருந்து தயாரிக்கப்படும் ஆன்டிஎபிலெப்ஸிரின் என்ற பொருளை வலிப்பு நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. பீடா கரோடின்’, வைட்டமின் பி, மற்றும் சத்துக்களை உடல் கிரகிக்க பைப்பரின் உதவுகிறது. ஆனால் அதிக அளவு பைப்பரின் (ஒரு நாளுக்கு 15 மி.கி. க்கு மேல்) உட்கொள்வது தவறு.


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை,

[தி.பி:2052,விடை(வைகாசி )18]

{01-06-2021} 

==================================================


மிளகு

மிளகு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக