மூலிகைப் பெயர்................ ..............கற்றாழை
மாற்றுப்
பெயர்கள்.....குமரி, கன்னி, தாழை,
......................................................அழுத்த எதிர்ப்பி,
தாவரவியல் பெயர்.........................ALOE VERA /
...................................................ALOE
BARBADENSIS
ஆங்கிலப்
பெயர்...........................INDIAN ALOES
சமஸ்கிருதப்
பெயர்.................................குமாரி
சுவை...............................................................கைப்பு
தன்மை.......................................................குளிர்ச்சி
01. சதைப்பற்றாகவும், விளிம்பில் முள்ளும் உள்ள மடல்களை உடைய கற்றாழை இனம். நடுவில் நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டில் பூங்கொத்து காணப்படும் (Harish)
02. சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை எனப் பல வகைகள் இருந்தாலும், இதன் குணம் சற்றேறக் குறைய ஒத்தே இருக்கும். இவற்றுள் பொதுவான மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது சோற்றுக் கற்றாழை மட்டுமே. (Harish)
03. மருத்துவத்திற்குப் பயன்படும் 200 வேதிப் பொருள்கள் கற்றாழையில் அடங்கி உள்ளன. வைட்டமின் ”ஏ”, ” பி-1”, “பி-2”, சர்க்கரைப் பொருட்கள், ஆகியவை உள்ளன. அலாயன் என்னும் வேதிப் பொருள் 50 விழுக்காடு கற்றாழையில் இருக்கிறது. இதில் நீர்ச் சத்து மிகுதியாக உள்ளது. (Harish)
04. பால், மடற்சோறு, சாறு, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. கற்றாழையின் ஒரு மடலைக் கீறினால் மஞ்சள் நிறத்தில் திரவம் வெளிப்படும். இதை மூசாம்பரம், கரியபோளம், இரத்த போளம், சன்னிசாயகம் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். (Harish)
05. கற்றாழைச் சோற்றை எடுத்து அப்படியே பயன் படுத்தக் கூடாது. அவை கைப்புச் சுவையும், முகர்ந்தால் வாந்தியும் ஏற்படுத்த் கூடியவை. உண்டால் வயிற்றுப் போக்கு வரும். ஆதலால் அதனைப் பலமுறை ( ஏழு முறை ) நன்றாகத் தண்ணீரில் கழுவிய பின் பயன்படுத்தலாம். (Harish)
06. கற்றாழையை உலர்த்தி, முறைப்படிப் பொடியாகச் செய்து உண்ணின் எப்பொழுதும் இளமையாக வன்மையுடன் நூறாண்டு வாழலாம். (Harish)
07. சோற்றை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துத் தலை முழுகிவர, முடி நன்கு வளரும், நிம்மதியான நித்திரை வரும். (Harish)
08. சோற்றுக் கற்றாழை வேரை அலசிப் பால் ஆவியில் அவித்து, உலர்த்திப் பொடி செய்து ஒரு மேசைக் கரண்டி (15 மி.லி.) பாலுடன் கொடுக்கச் சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.(Harish)
09. ஒரு கிலோ விளக்கெண்ணெய், பத்து முறை கழுவிய கற்றாழைச்
சோறு ஒரு கிலோ, அரைக் கிலோ பனங்கற்கண்டு, அரைக் கிலோ வெள்ளை வெங்காயச்
சாறு ஆகியவற்றைக் கலந்து, நீர் சுண்டக் காய்ச்சி ( இதன் பெயர் குமரி எண்ணெய்
).காலை மாலை 15 மி.லி. வீதம் உள்ளுக்குக் கொடுக்க, மந்தம், வயிற்று வலி, ரணம் குன்மக்கட்டி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை தீரும். (Harish)
10. காலை மாலை ஒரு தேக்கரண்டி ( 5 மி.லி ) குமரி எண்ணெய் கொடுத்து, காரம், புளி நீக்கி உணவு கொள்ள மேக நோய், பலவீனம், எரிச்சல், நீர்க் கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் சிவப்பு ஆகிய நிறங்களில் நீர் போதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளில் அக, புற ரணங்கள், சீழ் வடிதல் தீரும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேரும்.(Harish)
11. கற்றாழை மடலில் உள்ள சதைப் பற்றான சோற்றை எடுத்து நன்கு கழுவி கண்களின் மேல் வைத்துக் கட்ட, கண் எரிச்சல், கண் அரிப்பு ஆகியவை குணமாகும். (Harish)
12. கற்றாழையின் இளமடலின் சோற்றுடன் சீரகம், கற்கண்டு சேர்த்து இரத்தமும் சீதமும் கலந்த கழிச்சலுக்குக் கொடுக்கலாம். (Harish)
13. கற்றாழைச் சோற்றைக் கழுவி தினமும் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் இளமை நீடிக்கும். (Harish)
14. கற்றாழைச் சோற்றுடன் மோர் கலந்து அருந்தினால் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும். (Harish)
15. தோல் வறட்சிக்கு, கற்றாழைச் சோற்றைத் தடவிக் குளிக்கலாம். தீப் புண்களுக்கு இதனுடைய சாற்றைத் தடவி வரலாம். (Harish)
16. கோடை காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், உடல் காந்தல் ஆகியவற்றுக்கு
கற்றாழைச் சோற்றுச் சாறினை எடுத்துக் காலையில் குடித்து வந்தால் தீரும். (Harish)
17. முகம் பொலிவு பெறக் கற்றாழைச் சோற்றினை முகத்தில் தேய்த்துக் கழுவலாம். (Harish)
18. உடல் பருமனுக்கு கற்றாழைச் சோறு துண்டுகளை எடுத்துக் கழுவி தினசரி 3 அல்லது 4 துண்டுகளை விழுங்கினால் பருமன் குறையும். (Harish)
19. கண் நோய்களான கண்சிவத்தல், கண் எரிச்சல் ஆகியவற்றிற்கு இதன் சோற்றை நன்றாகக் கழுவி அதில் சிறிது படிக்காரம் சேர்த்து துணியில் முடிந்து தொங்கவிட, நீர் வடியும். அதனை 2 முதல் 3 துளி கண்ணில் விட, மேற்கண்ட நோய்கள் தீரும். (Harish)
20. கற்றாழைச் சோற்றை எடுத்து இரவில் பாதம் முழுதும் தேய்த்து விட்டு உறங்க, பாத வெடிப்பு, பாத எரிச்சல் ஆகியவை தீரும். (Harish)
21. தலைமுடி நன்கு வளர, கற்றாழைச் சோற்றின் சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் இறக்கி தினமும் தேய்த்து வர நல்ல பயன் கிடைக்கும். (Harish)
22. உடல் சூடு, எரிச்ச,ல் தூக்கமின்மை, கண் எரிச்சல் ஆகியவைகளுக்கு இதன் தைலத்தைப் பயன்படுத்தலாம். (Harish)
23. கற்றாழைச் சோற்றுடன் நெய் சேர்த்துக் காய்ச்சி ஒன்றிரண்டு தேக்கரண்டி அருந்த கருப்பைக் கோளாறுகள் தீரும். (Harish)
24. கற்றாழைச் சோற்றிலிருந்து பெறப்படும் கூழ், சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. (Harish)
25. இதனைத் தினமும் அருந்த சீரண உறுப்புகள் சீர்பெறும். கற்றாழைக் கூழ் சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். (Harish)
26. எள் எண்ணெயுடன் சம அளவு கற்றாழைச் சோற்றின் சாறு சேர்த்துக் காய்ச்சித் தலையில் தடவி வந்தால் நன்கு தூக்கம் உண்டாகும். (Harish)
27. வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகுத் தூள் இவைகளைக் கற்றாழைச் சோற்றின் சாறுடன் சேர்த்து உண்ண, நீர் சுருக்கு, உடல் அரிப்பு தீரும். (Harish)
28. கற்றாழை மடலைக் கீறினால் வரும் மஞ்சள் நிறத் திரவத்துடன், முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து, சிறிது மஞ்சள் கலந்து, கால் முட்டி வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும். (Harish)
29. ( ஆதாரம்:- வேலூர், ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ் மருத்துவமனை, முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s), அவர்கள் 25-02-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)
30. கற்றாழைச் சாறு நமது தோலில் நீரைவிட நான்கு மடங்கு வேகமாக ஊடுருவக் கூடியது. (Asan)
31. கற்றாழையின் சோற்றை எடுத்து தலைக்குத் தடவினால் உடலின் வெப்பத் தன்மையை நீக்கி, குளிர்ச்சியாகவும் உடலைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும் வழி வகை செய்கிறது. இது சருமத்திற்கு மட்டுமன்றி கூந்தலுக்கும் பெரிதும் உதவும். (Asan)
32. கற்றாழை மடலின் மேல் தோலில் இருந்து வெளியாகும் மஞ்சள் நிறத் திரவத்தைச் சேகரித்து இறுக வைத்தால் கிடைப்பது கறுப்பு நிறத்தில் இருக்கும் கரியபோளம். இதை மூசாம்பரம் என்றும் கூறுவர். கரியபோளம் அடிபட்ட வீக்கம், நெறிக்கட்டிகள், சுளுக்கு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த மருந்தகும். (Asan)
33. அடிபட்ட வீக்கத்திற்கு மூசாம்பரம் என்னும் கரியபோளம் நல்ல மருந்து. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளற வேண்டும். பின்பு, நீரில் கரைத்து வைத்த கரியபோளக் கரைசலை அத்துடன் சேர்த்துக் கிளறி, இறக்கி, இளஞ் சூட்டில் அடிபட்ட வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால், வீக்கம் சரியாகும்.(Asan)
34. கற்றாழையில் வைட்டமின் “ஏ”, “பி”, “பி-1”, ”பி-6”, “பி-12”, “சி”, “இ”, மற்றும் தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள், ஆகியவை உள்ளன. (Asan)
35. கண்களில் அரிப்பு, கண் வலி, கண் சிவந்து வீங்குதல் போன்றவை மாற கற்றாழைச் சோற்றைக் கண்களில் கட்டி இரவில் தூங்க வேண்டும். மூன்று நாட்களில் சரியாகும். (Asan)
36. ஆண்கள் சவரம் செய்யும் போது ஏற்படும் கீறல், காயங்களுக்கு உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறைப் பயன்படுத்தலாம். (Asan)
37. உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு கற்றாழையில் உள்ள
சர்க்கரைச் சத்து உதவுகிறது.. கற்றாழையின் சோற்றுப் பகுதியை 20 நிமிடங்கள் பூசிக் கழுவிவர, வியர்க்குரு, முகச்சுருக்கம், கரும் புள்ளிகள் மறைந்து
சருமத்தை மென்மை ஆக்குவதுடன், அதில் உள்ள இறந்த செல்களை புது செல்களாக மாற்றி புத்துணர்ச்சி
தரும். முதுமையைத் தள்ளிப் போடும். (Asan)
38. வெயிலில் செல்வதால் முகத்தில் ஏற்படும் நிற மாற்றங்களும் சீராகும். இதில் ஆண்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், முகம் பள பளக்கும். வறட்சியான சருமம் இருப்பவர்கள் கற்றாழையின் சோற்றை முகத்திற்குத் தடவி வந்தால், சருமத்தை ஈரப் பசையுடன் வைப்பதோடு, மென்மையுமாக்கும். (Asan)
39. தீக்காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து கற்றாழை. சூடுகளில் ஏற்படும் கட்டிகள், புண்கள் விரைவில் ஆறும். (Asan)
40. காலையில்வெறும் வயிற்றில் கற்ழைச் சோற்றுத் துண்டுகள் ஒன்றிரண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் சத்து கூடும். பலகீனம் மறையும். தாது விருத்தி ஏற்படும். பிள்ளைப் பேறு வேண்டுபவர்கள் கூட இதைச் சாப்பிட்டு வந்தால், நாளடைவில் பயன் பெறலாம். (Asan)
41. கற்றாழையைத் தலையில் தடவினால், உடலின் வெப்பத் தன்மையை நீக்கி, குளிர்ச்சியாகவும், உடலைத் தேவைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும் வழிவகை செய்கிறது. இவை சருமத்திற்கு மட்டுமன்றி கூந்தலுக்கும் பெரிதும் உதவும். (Asan)
42. கற்றாழைச் சோற்றுக்கு பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் தன்மை உள்ளது. எனவே இரவில் படுக்கும்போது, நேரடியாகத் தலையில் படும்படித் தேய்த்து, மறுநாள் காலையில் அலசவும். இப்படிச் செய்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, முடி உதிர்வதும் குறையும். (Asan)
43. சோற்றுக் கற்றாழையின் சோற்றுப் பகுதி (10 முறை கழுவியது) ஒரு கிலோ, விளக்கெண்ணெய் ஒரு கிலோ, பனங்கற்கண்டு அரைக்கிலோ, வெள்ளை வெங்காயம் அரைக் கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பதமாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி ( 5 மி.லி ) அளவு 2 வேளை குடித்து, காரம், புளி, விலக்கி வந்தால், மேக நோய் விலகும். (Asan)
44. கற்றாழை வேரைச் சுத்தம் செய்து பாலில் அவித்து, உலர்த்தி, பொடித்து, 15 மி.கிராம் எடுத்துப் பாலுடன் பருகினால், சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும். (Asan)
(475)
45. கற்றாழை மடலின் மேல் தோலை
நீக்கிவிட்டு உள்ளிருக்கும் அதன் சோற்றைக் கழுவி, கசப்பு நீக்கி, குழம்பாகச் சமைத்து உண்டால், போதை நீங்கும். மூல நோய்க்குச் சிறந்த மருந்து.(Asan)
46. பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் பிளந்து, அதில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை வைத்து மூடி, நூலால் கட்டி கூரை மீது இரவு நேரத்தில் வைத்து விட வேண்டும். பகலில் எடுத்து வீட்டிற்குள் வைக்க வேண்டும். இவ்வாறு 3 நாள் செய்தால், வெந்தயம் முளை கட்டி இருக்கும். இந்த வெந்தயத்தை 3 பாகமாக்கி, 3 தினங்கள் சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளை நோய் மாயமாய் மறையும். (Asan)
47. கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து (அதாவது சோற்றுப் பகுதியை) சற்றே அலசிவிட்டு மோரில் உண்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். (Asan)
48. கற்றாழைச் சோற்றினை 10 முறை கழுவிய பின் பயன் படுத்தலாம். சரியாகக் கழுவாவிட்டால், வாந்தி ஏற்படுத்தும். (Asan)
49. இதய – சிறிநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் கற்றாழையை எந்த வகையிலும் உள்ளுக்குள் சாப்பிட ( பயன்படுத்தக் ) கூடாது. பயன்படுத்தவும் வேண்டாம். (Asan)
50. ஆதாரம், நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 28-02-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)
51. சோற்றுக் கற்றாழை மடலை அரிந்து உள்ளிருக்கும் சோற்றினை எடுத்து நன்கு கழுவி விட்டு அந்த சோற்றினை கண்கணின் மேல் வைத்துக் கட்டினால் கண் எரிச்சல் தீரும். (001)
52. சோற்றுக் கற்றாழையின் சோற்றினை எடுத்து நன்கு கழுவி விட்டு அதை சிறிது நீர் விட்டு மிக்சியில் அடித்து 50 மி.லி சாறு எடுத்து, வாழைத் தண்டுச் சாறு 200 மி.லி எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சீரகப் பொடி 25 கிராம், பச்சரிசி மாவு 10 கிராம் சேர்த்துக் கலக்கி குடித்தால் சிறுநீர்க் கடுப்பு நீங்கும். (961)
53. சோற்றுக் கற்றாழைச் சாறும் நெல்லிக் காய்ச் சாறும் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சி, ஆறிய பின் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கறுப்பாக வளரும் (1752)
===========================================================
மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்” என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ் அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள் மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக் குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam77@gmail.com]
ஆட்சியர்,
தமிழ் மூலிகை வலைப்பூ,
[தி.பி:2052,விடை(வைகாசி
)01]
{15-05-2021}
கற்றாழை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக