இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

எலியாமணக்கு.

 

              மூலிகைப் பெயர்.......................................எலியாமணக்கு

              மாற்றுப் பெயர்கள்...................................காட்டாமணக்கு

              .....................................மணிக்காட்டாமணக்கு, ஆதாளை

              ................................................ஏரிக்கரைக் காட்டாமணக்கு

              தாவரவியல் பெயர்..............................JATROPHA CURCAS

              ஆங்கிலப் பெயர்................................................PHYSIC NUT

              சுவை............................................................................துவர்ப்பு

              தன்மை........................................................................வெப்பம்


           ===================================================


1)   எலியாமணக்கு, மாற்றடுக்கில் அமைந்த கை வடிவ இலைகளையும், கருஞ் சிவப்பு நிறத் துளிர்களையும், செந்நிற மலர்களையும் உடைய குறுஞ் செடி. காய் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும். விதை ஆமணக்கு விதை போன்று சிறிய வடிவில் இருக்கும். இலைக் காம்பை  ஒடித்தால் சிறு வெள்ளை நிறப் பால் வடியும்.

 

2)   எலியாமணக்கின் இலை, பால், பட்டை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

 

3)   எலியாமணக்கு என்பது ஆதாளை, மணிக் காட்டாமணக்கு என்ற பெயரிலும் வழங்கப் பெறுகிறது.. இதன் இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும். எலியாமணக்குப் பால் இரத்தக் கசிவை நிறுத்தவும், சதை, நரம்பு வீக்கத்தை குறைக்கவும் பயன்படும்.

 

4)   எலியாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையைப் போட்டு வேகவைத்து, இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒற்றடம் கொடுத்து, வெந்த இலைகளை வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.

 

5)   எலியாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட, கட்டிகள் கரையும்; வலி அடங்கும்.

 

6)   எலியாமணக்கின் இளங் குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

 

7)   எலியாமணக்குப் பாலை வாயில் விட்டுக் கொப்பளிக்க வாய்ப் புண்கள் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில்  வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும்.

 

8)   எலியாமணக்கு வேர்ப் பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக் காயளவு பாலில் கலந்து கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெரு வயிறு குட்டம் ஆகியவை தீரும்.

 

9)   எலியாமணக்கின்  கொழுந்தை சிறிதளவு எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து நன்கு கசக்கித் தேள் கொட்டியவரிடம் வாயிலிட்டு மென்று விழுங்கச் செய்தால், உடனடியாக நஞ்சு இறங்கும்.


===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

==================================================

எலியாமணக்கு

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக