இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 22 மே, 2021

துத்தி

 

       மூலிகைப் பெயர்..............................................................துத்தி

       மாற்றுப் பெயர்கள்...........................கக்கடி, கிச்சகி, வாதி

       தாவரவியல் பெயர்..............................ABUTILON INDICUM

       தாவரக்குடும்பம் ..................................................MALVACEAE.

       ஆங்கிலப் பெயர்....COUNTRY MELLOW, MARSH MELLOW

       சுவை.................................................................................கைப்பு

       தன்மை.........................................................................குளிர்ச்சி

 

===================================================

 

1)    துத்தியானது இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான சுவையுண்டு, இலை உடம்பில் பட்டால் சற்றே அரிக்கும்.

 

2)    துத்தி நான்கு அல்லது ஐந்தடி உயரம் வரை வளரும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்கின்றது.

 

3)    துத்தி கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும் எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை.

 

4)    மற்ற கீரைகளைப் போலவே பொரியல் சமையல்செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது.

 

5)    துத்தியில் பலவகை உண்டு.  எலிச்செவி துத்தி, ஐயிதழ்த் துத்தி. ஒட்டுத் துத்தி, கண்டு துத்தி, காட்டுத் துத்தி, கொடித் துத்தி, சிறு துத்தி,செந்துத்தி, நாம துத்தி, வயல் துத்தி, பணியாரத் துத்தி, பெருந் துத்தி, பொட்டகத் துத்தி, இரட்டகத் துத்தி பசும்துத்தி, கருந்துத்தி,   நிலத்துத்தி, நாடத்துத்தி ஆகியவை   இவற்றுள் அடங்கும்.  பலன் எல்லாம் ஒன்றே.

 

6)    துத்தியின் இலை, பூ, வேர், பட்டை, ஆகியவை மருத்துவப்பயனுடையவை. துத்தி உடலிலுள்ள புண்களைஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது.

 

7)    துத்தி இலையை ஆமணக்கு நெய் விட்டு வதக்கி, ஒற்றடம் கொடுத்துக் கட்ட, இரத்த மூலம், சீழ் மூலம், மூலத்தில் உண்டாகும் கட்டிகள், புண்கள் நீங்கும். (355)

 

8)    துத்தி இலை அல்லது துத்தி வேரின் குடிநீரால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் நீங்கும்.

 

9)    துத்தி இலையை எந்த வகையில் உண்டாலும் வெப்பத்தினால் உண்டாகும் எல்லா நோய்களும் நீங்கும்.

 

10)   துத்திப்  பூவை உலர்த்திப் பொடித்து, பாலும் கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வர, குருதி வாந்தி, அழல் நீங்கும். தேகக் குளிர்ச்சி உண்டாகும். ஆண்மை பெருகும்.

 

11)   துத்தி விதையைப் பொடித்து, சர்க்கரையுடன் கலந்து 2 கிராம் அளவு காலை மாலை உண்டு வர, கரும்புள்ளி, உட்சூடு, பெருநோய் நீங்கும்.

 

12)   துத்தி இலையைக் காரமின்றிப் பொரியலாய்ச் செய்து முதல் சோற்றுடன் பிசைந்து 40 முதல் 120 நாள் வரை சாப்பிட்டு, புளி, காரம், புகை, புலால் நீக்க மூல நோய் முற்றிலும் நீங்கும்.

 

13)   மூலத்திற்கு, துத்தி இலையைக் கொண்டுவந்து மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம் கட்டுவது போன்று துணியை வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் இரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

 

14)   துத்தி இலை, வேர் முதலியவற்றை முறைப்படி குடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வருபவர்கள் வாய் கொப்பளித்து வர இரத்தம் வடிவது நிற்கும்.

 

15)   உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையைக் கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில் துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலி குணமாகும்.

 

16)   கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறு இருபத்தினான்கு கிராம், நெய் பன்னிரண்டு கிராம், கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.

 

17)   ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.

 

18)   துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டுவந்தால் மூலச்சூடு நீங்கும்.
எளிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்து களியாகக் கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டிவந்தால் அவை எளிதில் பழுத்து உடையும்.

 

19)   இரத்த வாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப்பூவை நன்கு உலரவைத்து சூரணம் செய்து தேவையான அளவு பாலும் கற்கண்டும் சேர்த்து அருந்தி வந்தால் இரத்த வாந்தி நின்று உடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும் இது பெருக்கும்.

 

20)   துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குண்மாகும்.

 

21)   துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன் கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறு மி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேக அனல் முதலியவை கட்டுப்படும்.

 

22)   வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் துத்தி விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வரலாம்.

 

23)   துத்தி வேர் முப்பத்து ஐந்து கிராம் திராட்சைப் பழம் பதினேழு கிராம், நீர் எழுநூறு மி.லி சேர்த்து நன்கு காய்ச்சி நூற்று எழுபது மி.லிஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.

 

24)   துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.

 

25)   துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும் பாலில் சேர்த்துக் குடித்து வர மூலச் சூடு தணியும்.

 

26)   வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய       மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குண்மடையும்.

 

30)   எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும்.

 

31)   துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கிசாறு எடுத்துக்கொண்டு அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாகக் காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குத் தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

 

32)   குடற்புண்ணால் வேதனைப் படுகின்றவர்கள் துத்திக் கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்க்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டைக் கம்மல் சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தைக் குடித்துக் குணமடையலாம் .

 

33)   துத்தி இலை, துத்தி வேர் ஆகியவை கொண்டு கசாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால், பல் ஆட்டம், பல்வலி, பல் கூச்சம் ஆகியவை தீரும். (235)

 

34)   துத்தி இலையை விளக்கெண்னையில் வதக்கி இளஞ் சூட்டில் கட்டி வந்தால் இரத்த மூலம். சீழ் மூலம் ஆகியவை தீரும்.  (355)

 

35)   துத்தி இலைகளை வேக வைத்து சாறு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து, பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மேகச் சூடு, ஆசனக் கடுப்பு ஆகியவை நீங்கும்.  (377)

 

36)   துத்தி இலையையும் வெள்ளைப் பூண்டையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தினசரி பரு மீது தடவி வந்தால் முகப் பருக்கள் நீங்கும்.  (830)

 

37)   துத்தி இலையை அரைத்து காடியில் (புளிப்புத் திரவம்) கரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் முகப் பருக்கள் மறைந்து விடும்.  (832)

 

38)   துத்திக் கீரையைப் பறித்து சுத்தம் செய்து பொரியல் செய்து 120 நாட்கள் உணவுடன் சாப்பிட்டு வந்தால் மூல நோய் நீங்கும். (மாமிசம், காரம், புளி கூடாது)  (1405)

 

39)   துத்திப் பூ சூரணம் அரைத் தேக்கரண்டி எடுத்து சர்க்கரை கலந்து காலை மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு குணமாகும். (203)  நுரையீரல் கபம் தீரும்  (1406)

 =======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

 

==================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )08]

{22-05-2021}

==================================================



துத்திக்காய்

துத்திப் பூ

துத்திச்செடி

துத்தி விதை

துத்தியின் பயன்

துத்திச்செடி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக