இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஆடாதொடை.

 

                  மூலிகைப் பெயர்.................................ஆடாதொடை

                  மாற்றுப்பெயர்கள்.............கபக் கொல்லி, வாசை

                  ........ஆடாதொடைவாசகி, நெடும்பர், அட்டகசம்

                  ...............ஆடுதொடா,, ஆடாதோடா, ஆடாதோடை

                  தாவரவியல் பெயர்....................ADHATODA  VASICA

                  ஆங்கிலப் பெயர்..................................MALABAR NUT

                  சுவை.....................................................................கைப்பு

                  தன்மை...............................................................வெப்பம்

     ====================================================

        01.  நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும், வெள்ளை நிறப்                           பூக்களையும்  உடைய செடி. ஆறு அடி உயரம் வரை வளரும்.                                         சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப் படுகிறது.

 

02.  இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை. சித்த மருத்துவத்தில் இவை பிரசித்தி பெற்றவை. .(Asan)

 

03. சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

 

04.  இலையின் பண்பு: வாதம், சிலேத்தும நோய்களின் பெருக்கை அறுக்கும். வாத தோஷம், பற்பல சுரம், வயிற்று நோய், குருதியழல், இருமல், மேலிளைப்பு, வாந்தி, விக்கல், சூலை, அண்ட வாயு ஆகியவற்றைப் போக்கும்.

 

05.  நல்ல குரல் ஒலியைத்தரும். இலையின் சாறை 10 முதல் 20 துளி வரை எடுத்து, தேனுடன் கலந்து கொடுக்க, மேற்கண்ட பிணிகள் தீரும்

 

06.  பூவின் பண்பு: ஆடாதொடை பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட, கண்களில் உண்டாகும் நோய்கள் தீரும்

 

07.  பட்டையின்பண்பு:. ஆடாதொடைத் தண்டின் பட்டையை எடுத்து  குடிநீர் செய்தாகிலும், பொடி செய்தாகிலும் சுரம், இருமல், இளைப்பு, இரைப்பு ஆகிய நோய்களுக்குக் கொடுக்கலாம்.

 

08.  வேரின் பண்பு: இதனால் இருமல், அழல் மந்தம், அழல் மிகுதி, மூச்சுத் திணறல், கழுத்து வலி ஆகியவை தீரும்.

 

09.  ஒருபங்கு இலைக்கு எட்டுப் பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி எட்டில் ஒரு பங்காகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரைத் துணியில் தோய்த்து ஒற்றடமிட, வீக்கம், சூலை, கீல்பிடிப்பு முதலியன தணியும்.

 

10.  ஆடாதொடை உலர்ந்த இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டி புகைப் பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும். .(Asan)

 

11.  ஆடாதொடை இலை 100 கிராம், சங்கிலை 100 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி, குடித்து வந்தால், வயிற்று வலி தீரும். .(Asan)

 

12.  ஆடாதொடை இலைச் சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப் பாலில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி, இரத்தபேதி குணமாகும். .(Asan)

 

13.  ஆடாதொடை இலைகள் 10 எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு, கால் லிட்டராகக் காய்ச்சி, தேன் கலந்து காலை மாலை  40 நாட்கள் பருகி வந்தால், எலும்புருக்கி நோய், காசநோய், இரத்தகாசம், சளி ஆகியவை தீரும். .(Asan)

 

14.  ஆடாதொடை இலைத் தூளை, ஊமத்தை இலையில் வைத்து சுருட்டி, ஆவி பிடித்தால் மூச்சுத் திணறல் தீரும். இலையை உலர வைத்து சுருட்டுப் போல சுருட்டி, பற்ற வைத்து புகை பிடித்தால் இரைப்பு நோய் (ஆஸ்துமா) தணியும். .(Asan)

 

15.  சுமார் 3 இலைகளைக் குறுக்காக அரிந்து, ஒரு ஏலக்காய் சேர்த்து, 200 மி.லி வெந்நீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி 25 முதல் 50 மி.லி அளவுக்கு தினமும் 3 வேளை கொடுத்தால், குருதியழல் (இரத்தக் கொதிப்பு), காய்ச்சல், இருமல் போகும். .(Asan)

 

16.  இரண்டு மூன்று கொழுந்து இலைகளைப் பொடியாக நறுக்கி, புதிய மண் சட்டியில் போட்டு, சிறிதளவு தேன் சேர்த்து எரித்தால் ஒருவித வாசனை வரும். அப்போது ஒரு கிராம் சிற்றரத்தை, 3 கிராம் தாளிசபத்திரி, 3 கிராம் திப்பிலி, 5 கிராம் நசுக்கிய அதிமதுரம், ஆகியவற்றுடன் 500 மி.லி தண்ணீரும் சேர்த்து 100 மி.லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, காலை மாலை குடித்து வந்தால், கோழைக் கட்டு அகன்று சளி வெளிப்படும். இரைப்பு, இருமல், காய்ச்சல் நீங்கும். .(Asan)

 

17.  ஒரு பங்கு இலைக்கு எட்டு பங்கு நீர் விட்டு, எட்டில் ஒன்றாகக் காய்ச்சி, வடிகட்டி, துணியில் தோய்த்து ஒற்றடம் கொடுத்தால் கீல் பிடிப்பு, சூலை, வீக்கம் குறையும். .(Asan)

 

18.  இலை, வேரை சம அளவு எடுத்து, மிளகு சேர்த்து, ஊறல் குடி நீர் செய்து கொடுத்தால் உப்பிசம், காய்ச்சல், ஈளை, இருமல், இரைப்பு தணியும். .(Asan)

 

19.  ஆடாதொடை மணப்பாகு:- ஆடாதொடை இலைகள் 700 கிராம் எடுத்து, நறுக்கி, நெய்யில் வதக்கி, இலவங்கம் 10 கிராம், ஏலக்காய் 4 , சிற்றரத்தை 10 கிராம், அக்கரகாரம் 10 கிராம் ஆகியவற்றைத் தூள் செய்து போட்டு, பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து, தேன் பதமாகக் காய்ச்சி ஒரு சீசாவில் அடைத்து வைக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நீர்க் கோவை தீரும். 3 வேளையாக தொடர்ந்து கொடுத்து வந்தால், நிமோனியா காய்ச்சல், மார்ச்சளி, காசம், நீர்த்த ஆஸ்துமா, எலும்புருக்கி நோய், கபம், இருமல் ஆகியவை போகும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டரை மி.லி முதல் 5 மி.லி வரை கொடுக்கலாம். .(Asan)

 

20.  ஆடாதொடையை அரைத்து, சாறெடுத்து, தினசரி 15 மி.லி வீதம் ருகி வந்தால் இனிமையான குரல் வளம் உண்டாகும். .(Asan)

 

21.  ஆடாதொடை இலைச் சாறும், தேனும் சம அளவு கலந்து, சிறிது சர்க்கரை சேர்த்து, தினசரி 4 வேளைகள் கொடுத்து வந்தால் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, இரத்த வாந்தி ஆகியவை நீங்கும். குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கு 5 துளிகள், சிறுவர்களுக்கு 10 துளிகள், பெரியவர்களுக்கு 15 துளிகள் கொடுக்கலாம். .(Asan)

 

22.  ஆடாதொடை இலை, நுணா இலை, வாதநாராயணன் இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து, இத்துடன் 50 கிராம் உளுந்து, தலா அரை தேக்கரண்டி மஞ்சள், கடுகு, சேர்த்து, முட்டையின் வெள்ளைக் கரு விட்டு நன்கு அரைத்து  கழுத்து வலி, மூட்டு வீக்கம், மூட்டு வாதம், இடுப்பு வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். .(Asan)

 

23.  கர்ப்பிணிகள் ஆடாதொடையை அதிகம் பயன்படுத்தக் கூடாது. .(Asan)

 

24.  ஆடாதொடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சம அளவு எடுத்து  இடித்து சலித்து  ஒன்றாகக் கலந்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், சுவாசகாசம், இருமல், சளிச்சுரம், சளி, நரம்பு இழுப்பு, குடைச்சல் ஆகியவை குணப்படும்.(Asan)

 

25.  (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 03-04-2016 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

26.  ஆடாதொடை பொடி ஐந்து கிராம் எடுத்து சிறிது தேன் கலந்து உள்ளுக்கச் சாப்பிட்டால் சளியுடன் இரத்தம் வருவது நிற்கும். (141)

 

27.  ஆடாதொடை இலைகளை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி மெல்லிய துணியில் வைத்து ஒற்றடம் கொடுத்தால் கழுத்துப் பிடிப்பினால் ஏற்படும் வலி குணமாகும். (582) (1755)

 

28.  ஆடாதொடை இலை ஒரு கைப்பிடி, சங்கிலை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு தம்ளர் நீர் விட்டு கால் தம்ளராகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை 20 மி.லி வீதம் பருகி வந்தால் வயிற்று வலி குணமாகும் .(731)

 

29.  ஆடாதொடை இலைச் சாறு 50 மி.லி எடுத்து மருதம் பட்டைத் தூள் 25  கிராம் எடுத்து இரண்டையும் வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் நோய்கள் குணமாகும் .(981)

 

30.  ஆடாதொடை இலைகலைப்பறித்து வந்து சுத்தம் செய்து சட்டியில் போட்டு ஒரு தம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை தம்ளராக சுண்டியதும் எடுத்து வடிகட்டி 50 மி.லி வீதம் தினசரி பருகி வந்தால் காசநோய் (ஆஸ்துமா) குணமாகும். (1078)

 

31.  ஆடாதொடை, கண்டங்கத்தரி, பற்பாடகம், சுக்கு, விஷ்ணு கிராந்தி ஆகியவை சம அளவு எடுத்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சி வேளைக்கு 25 மி.லி வீதம் அருந்தி வந்தால் நச்சு சுரம் குணமாகும்.  (1469) (1686)

 

32.  ஆடாதொடை இலைகளை எடுத்து நீர்விட்டுக் கசாயம் செய்து 25 மி.லி எடுத்து அத்துடன் தேன் கலந்து காலை மாலை பருகி வந்தால் சளிக்காய்ச்சல் குணமாகும் (1696).

 

33.  ஆடாதொடை இலைகளை நெய்யில் வதக்கித்  துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி உண்டாகும் .(1731)

===========================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

  சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க ! 

==============================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,மேழம்(சித்திரை)17]

{30-04-2021}

 

================================================

ஆடாதொடை


ஆடாதொடை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக