இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 28 மே, 2021

மணித்தக்காளி

 

      மூலிகைப் பெயர்...........................................மணித்தக்காளி

      மாற்றுப் பெயர்கள்.................வாயசம், மிளகுத் தக்காளி,

      ....................உலகமாதா, சுக்குட்டிக் கீரை, விடைக்கந்தம்

      ............................................கருஞ்சுக் கட்டி, குட்டித் தக்காளி,

      .........................................குட்டைத் தக்காளி, குறுந்தக்காளி,

      ...........................................................சிறுன்குன்னி., காகமாசி

      தாவரவியல் பெயர்..................................SOLANUM NIGRUM

      ஆங்கிலப் பெயர்..................................BLACK NIGHT SHADE

      சுவை................................................................................இனிப்பு

      தன்மை..........................................................................குளிர்ச்சி

 

===================================================

 

 

01.  ஈட்டி முனை வடிவ ஒற்றை இலைகளும், நான்கு இதழ்களுடன் வெள்ளை நிறத்தில் அமைந்த பூக்களும், பூக்கள் பல உள்ள   சிறு மலர்க் கொத்துகளும்,  பச்சை நிறத்தில் காய்களும், அடர் நீல நிறத்தில் குன்றிமணி அளவுக்குப் பருமனுள்ள பழங்களும் உடைய செடிதான் மணித்தக்காளி.  சில செடிகளில் பழங்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கும். பழங்கள்  இனிப்புச் சுவை உள்ளவை. 40 செ.மீ உயரம் வரை வளரும். (Asan)

 

02.  மணித் தக்காளியில் கறுப்பு, சிவப்பு என இரண்டு இனங்களுண்டு.  குணத்தில் இவ்விரண்டுக்கும் பெரிதும் வேற்றுமை இல்லை.  (Asan)

 

03.  மணித் தக்காளியில் இரும்பு, கால்சியம், கொழுப்பு,  நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்”, “பி”, “சி”, பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், புரதம், பொட்டாசியம், ரிபோபிளேவின் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளன. (Asan)

 

04.  மணித்தக்காளி இலைச் சாறை தேமல், சொறி, சிரங்கு, புண்கள் மேல் தடவி வரலாம். நிவாரணம் தரும். மணித் தக்காளி இலைச் சாறுடன் தேன் கலந்து உட்கொண்டால், உடல் பருக்கும். (Asan)

 

 

05.  மணித் தக்காளிக் கீரையை தினந்தோறும் பருப்பு சேர்த்து சமைத்து உண்டு வரலாம். வாதம் கட்டுப்படும். (Asan)

 

06.  மணித் தக்காளிக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் சளி, இருமல், இரைப்பு குறையும். தொண்டைக் கர கரப்பு நீங்கும். (Asan)

 

07.  மணிதக்காளி இலைச் சாற்றை வாயில் வைத்திருந்து, கொப்பளித்து, அடக்கி வந்தால், வாய்ப்புண் ஆறும். வாய் துர்நாற்றம் அகலும். (Asan)

 

08.  மணித் தக்காளி இலையைச் சாறு எடுத்து 30 மி.லி வீதம், மூன்று வேளை தினமும் அருந்தினால் உடல் சூடு அகலும். வாய்ப்புண் ஆறும். (Asan)

 

09.  மணித் தக்காளிக் கீரையைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடுங்கள்; வாய்ப்புண் ஆறும். (Asan)

 

10.  மணி தக்காளிக் கீரையை வதக்கி, மூட்டுப் பகுதியில் பற்றுப் போட்டு, ஒற்றடம் கொடுத்தால், வலிக்கு நிவாரணம் கிடைக்கும். (Asan)

 

11.  மணித்தக்காளிக் கீரைச் சாற்றுடன் பசும் பால் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், காமாலை நோய் கட்டுப்படும். (Asan)

 

12.  மணித் தக்காளிக் கீரையை அடிக்கடிச்  சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலிலிருந்து விடு படலாம். உடல் வெப்பமும் தணியும். இருமல், இளைப்பு, வயிற்றுப் போக்கு கட்டுப்படும். வயிற்றுப் புண் ஆறும். (Asan)

 

13.  ஒரு கைப்பிடி மணித் தக்காளிக் கீரை, மிளகு 5, திப்பிலி 2, மஞ்சள் தூள் 2 சிட்டிகை, சேர்த்து நன்றாக அரைத்து தேன் கலந்து உட்கொண்டால், கபம், இருமல் தணியும். (Asan)

 

14.  சிறிதளவு மணித் தக்காளிக் கீரையைப் பாசிப் பருப்பு போட்டு, கூட்டு வைத்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால், மூல நோய் தொல்லை குறையும். (Asan)

 

15.  கைப்பிடி அளவு மணித் தக்காளிக் கீரை, ஒரு தேக்கரண்டி பார்லி அரிசி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கசாயம் வைத்துக் குடித்து வருகிறவர்களுக்கு, நீர்க் கடுப்பு, சிறு நீர் எரிச்சல் கட்டுப்படும். (Asan)

 

16.  மணித் தக்காளிக் கீரை, ஒரு மிளகாய் வற்றல், சிறிது சீரகம் ஆகியவற்றை எடுத்து எண்ணெயில் வதக்கி, தேங்காய்ப் பால்தண்ணீர் விட்டு வேக வைத்து உண்டு வாருங்கள். வாய்ப்புண் குறையும்.  (Asan)

 

17.  மணித் தக்காளிக்கீரையை வேக வைத்து, தண்ணீரைக் குடிக்கலாம். பின்பு கீரையை  மிளகாய் வற்றல்உப்பு  சேர்த்து தாளித்து உணவுடன் சாப்பிடலாம். வயிற்றுப் புண் ஆறும். (Asan)

 

18.  மணி தக்காளிக் கீரை மற்றும் அதன் பழத்தின் விதைகளை  உலர வைத்துப் பொடியாக்கி, அரைத் தேக்கரண்டி வீதம் காலை மாலை இரு வேளைகள் உட்கொண்டு வரலாம். இதய நோய் சீரடையும். (Asan)

 

19.  மணித் தக்காளிக் கீரை 100 கிராம், வெங்காயம் 2, பாதி மூடி எலுமிச்சைச் சாறு  சேர்த்து கசாயம் வைத்து, காலை உணவுக்குப் பின் குடித்து வந்தால் உடல் மெலியும். (Asan)

 

20.  ஆண்கள் மணித் தக்காளிக் கீரையை அதிகம் உண்டு வந்தால் உயிரணுக்கள்  வலுப் பெறும். (Asan)

 

21.  மணித் தாக்காளிப் பழம் பெண்கள் கருத்தரிக்க உதவும். இதைச் சாப்பிட்டு வந்தால், கருப் பை பலமடைந்து மகப்பேறு எளிதாக நடைபெற உதவும். (Asan)

 

22.  மணித் தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து வந்தால், கப நோயால் உண்டாகும் நாப்புண், வேக்காடு நீக்கும். Asan)

 

23.  மணித் தக்காளியை கறி செய்தோ, வேறு வகையிலோ சாப்பிட்டு வந்தால் மார்பில் கோழை சேர்தல், இருமல், இளைப்பு (‌ஷயம்) முதலியன விலகும். (Asan)

 

24.  மணித்தக்காளிக் காய், கனி, இலை, வேர் இவற்றை ஊறுகாய், வற்றல், குடிநீர் முதலியவைகளாக உட்கொள்ள நீண்ட வாழ்நாளும் நோயற்ற உடலுடனும் இருக்கச் செய்யும். (Asan)

 

25.  மணித்தக்காளி வற்றல் 100 கிராம் கொதிக்கிற 500 மி.லி.  வெந்நீரில் சேர்த்து, ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து, வடிக்கட்டி 50 மி.லி அளவு கொடுத்தால் நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு ஆகியவை தீரும். (Asan)

 

26.  மணித்தக்காளி வற்றல் சுவையின்மையை நீக்கும். காயை உலர்த்தி வற்றல் செய்து நெய்யில் வறுத்தோ அல்லது குடிநீரிட்டோ கொடுக்க வாந்தியைப் போக்கிக் கழியச் செய்யும். கோழையை அகற்றும். (Asan)

 

27.  மணித்தக்காளி இலைச் சாற்றில்  50 மி,லி தினம் 3 வேளை கொடுக்க, நீரைப் பெருக்கி, நீர்ப்பாண்டு, பெருவயிறு, வாய்ப்புண், உட்சூடு இவற்றை அகற்றும். (Asan)

 

28.  மணித் தக்காளி வற்றலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது உப்பு, ஓரிரண்டு வறுத்த மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்துப் பொடித்து சோற்றுடன் பிசைந்து, 2 – 3 வேளை சாப்பிட்டால் நெஞ்சுச் சளி நீங்கும்.  (Asan)

 

29.  மணித் தக்காளி சூப் தேவையான பொருள்கள்: நறுக்கிய மணித் தக்காளிக் கீரை ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் 2, வெங்காயம்தக்காளி தலா ஒன்று, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணை, பெருங்காயத் தூள், மிளகுத் தூள், கறிவேப்பிலை, எலுமிச்சை அரை மூடி, தண்ணீர் 2 தம்ளர், உப்பு. செய்முறை:- வாணலியில் நல்லெண்ணை ஊற்றி, காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும். ஓரளவு வதங்கியதும், தக்காளியை வெட்டிப் போட்டுக் கிளறவும். அதில் நறுக்கிய மணித் தக்காளிக் கீரையைப் போட்டு, நன்றாக வதங்கியதும், ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும்.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, அரைத்த கலவையில் ஊற்றி மறுபடிக் கொதிக்க விடுங்கள். . மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். சத்தான சுவையான மணித் தக்காளி சூப் தயார்.  இது வயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகளைச் சரி செய்யும். (Asan)

 

30.  (ஆதாரம்:- நாகர்கோயில், எஸ். மகாலிங்கம் ஆசான், 01-01-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

31.  மணித்தக்காளி இலை, துளசி இலை இரண்டையும் சம அளவு எடுத்து கசக்கி சாறு பிழிந்து, மூன்று துளிகள் காதில் விட்டால், காது வலி தீரும்.  (051)

 

=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

===================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி)14]

{28-05-2021}

===================================================


மணித்தக்காளிக் கீரை

மணித்தக்காளிக் கீரை

மணித்தக்காளி

மணித்தக்காளிப் பழம்

மணித்தக்காளி வற்றல்



மணித்தக்காளி

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக