இது மூலிகைத் தோட்டத்தின் தலைவாயில் !

தமிழ் மூலிகை !

வை.வேதரெத்தினம். வணி.இ

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 19 மே, 2021

கோரைக்கிழங்கு

 

      மூலிகைப் பெயர்:-..............................கோரைக்கிழங்கு

      மாற்றுப் பெயர்கள்:-.................முத்தக்காசு, எருவை,

      ......................................................................கோரா, முஸ்தா

      தாவரவியல் பெயர்:.......................CYPERUS ROTUNDUS

      ஆங்கிலப்பெயர்:-...............................................NUT GRASS

 

================================================

 

 

01.   கோரை புல் வகையைச் சார்ந்தது. உறுதியற்ற தண்டுகளையும், தட்டையான நீண்ட இலைகளையும், உச்சியில் சிறு பூக்களையும், சல்லி வேர்களையும், முட்டை வடிவக் கிழங்குகளையும் உடையது கோரை. (Asan)

 

02.   கிழங்குகள் வெளிப்புறம் கறுப்பகவும், உட்புறம் வெள்ளையாகவும், கசப்புச் சுவையுடன் ஒருவித நறுமணத்துடன் காணப்படும். இந்தக் கிழங்கினைப் பன்றிகள் விரும்பித் தின்னும்.(Asan)

 

03.   கிழங்கு மட்டுமே மருத்துவக் குணம் உடையது. தண்டுகள் பாய் முடைவதற்குப் பயன்படுகிறது. கோரையில் சிறுகோரை, பெருங்கோரை என் இருவகை உள்ளன. பெருங்கோரையில் மட்டுமே கிழங்குகள் இருக்கும்.(Asan)

 

04.   கோரைக் கிழங்கை அரைத்து காய்ச்சிய பால் சேர்த்து அருந்தினல், பசியின்மை அகலும்; வயிற்றுப் போக்குக் கட்டுப்படும்.(Asan)

 

05.   ஒரு கிராம் கோரைக் கிழங்குப் பொடியை தினமும் இரு வேளை பாலில் கலந்து பருகி வரலாம். உடல் பருமனாகும். மூட்டுவலி தசை வலி குறையும்.(Asan)

 

06.   ஒரு கிராம் கோரைக் கிழங்குப் பொடியைச் சிறிதளவு தேன் கலந்து காலை மாலை சாப்பிடலாம். உடல் பொலிவு அடையும். நினைவாற்றல் பெருகும்.(Asan)

 

07.   கோரைக் கிழங்குப் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து  நீர், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு தணியும்.(Asan)

 

08.   காய்ச்சாத பசும் பாலில் கோரைக் கிழங்குப் பொடியைக் கலந்து குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலில் வியர்வை நாற்றம் அகலும்.(Asan)

 

09.   உடல் சிறுத்தும் வயிறு பெருத்தும் காணப்படும் குழந்தைகளுக்கு கோரைக் கிழங்கினைத் தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுக்கலாம்.(Asan)

 

10.   பச்சைக் கோரைக் கிழங்கினை அரைத்து மார்பகத்தில் பூசி வந்தால் பால் சுரப்பு மிகுதியாகும்.(Asan)

 

11.   சம அளவு கோரைக் கிழங்கும் இஞ்சியும் எடுத்து தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டைக் காய் அளவு சாப்பிட்டால் சீதபேதி கட்டுப்படும். குடல் புழுக்கள் வெளியாகும்.(Asan)

 

12.   கோரைக் கிழங்கை நன்றாக்க் கழுவி நீர் விட்டுக் காய்ச்சி இரண்டு நாட்கள் சிறிதளவு குடித்து வந்தால் செரியாமை கட்டுப்படும்.(Asan)

 

13.   கோரைக் கிழங்கு, திரிபலா, திராட்சை, பேய்ப்புடல், வெப்பாலை, வேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி அருந்தினால் காய்ச்சல் தணியும்.(Asan)

 

14.   ஆவாரை வேர், கொன்றை வேர், கோஷ்டம், கோரைக்கிழங்கு, நாவல் பட்டை  ஆகியவற்றைச் சம அளவு எடுத்து பொடித்து கசாயம் வைத்துக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.(Asan)

 

15.   சீந்தில் கொடி, கோரைக் கிழங்கு, சுக்கு, கண்டங்கத்தரி, சிற்றரத்தை ஆகியவற்றைத்  தலா 5 கிராம்  எடுத்து இடித்து, இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வந்தால் இருமல் தணியும்.(Asan)

 

16.   சம அளவு கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு, வேப்பம் பட்டையுடன் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, பாதியாகச் சுண்டும் வரைக் காய்ச்சி சிறிதளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் தலைவலி கட்டுப்படும்.(Asan)

 

17.   வாரம் ஒரு முறை சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, சந்தனப் பொடியுடன் பால் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசி சுமார் பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகச்சுருக்கம், மரு, முகப்பரு ஆகியவை நீங்கும்.(Asan)

 

18.   வயல்களில் பெருங்கோரை பெரிதாக வளர்ந்து காணப்படும். இதனைக் கொண்டு கோரைப் பாய் பின்னப்படுகிறது. இதில் படுத்தால் பசி மந்தம், சுரம் குறையும். நல்ல தூக்கமும் உண்டாகும்.(Asan)

 

19.   (ஆதாரம்:- நாகர்கோயில் எஸ். மகாலிங்கம் ஆசான் 26-03-2017 நாளிட்ட இராணி வார இதழில் எழுதிய கட்டுரை.)

 

20.   கோரைக் கிழங்குப் பொடி 2 தேக்கரண்டி, குப்பை மேனி இலைப் பொடி 1 தேக்கரண்டி, மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி, மூன்றையும் எடுத்து குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.(Harish)

 

21.   பச்சைக் கோரைக் கிழங்கை அரைத்துக் குளித்து வந்தால் உடலில் உண்டாகும் துர்நாற்றம் விலகும்.(Harish)

 

22.   டெங்குவிற்கு வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீர் சூரணத்தில் கோரைக் கிழங்கும் ஒரு அங்கமாகும்.(Harish)

 

23.   பச்சைக் கோரைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றிட்டு வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும்.(Harish)

 

24.   தொடர் வாந்தி ஏற்பட்டால், கோரைக் கிழங்குடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வேளைக்கு 60 மி.லி வீதம் அருந்தினால் வாந்தி நிற்கும்.(Harish)

 

25.   உடலில் ஏற்படும் புண்ணிற்கு பச்சைக் கிழங்கை அரைத்துப் பற்றிட்டால், புண் ஆறும்.(Harish)

 

26.   கோரைக் கிழங்கின் சாறினைக் குடித்து வந்தால், வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.(Harish)

 

27.   கோரைக் கிழங்கின் பொடி ஒரு கிராம் அளவுக்கு எடுத்து, வெந்நீரில் கலந்து தினசரி 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.(Harish)

 

28.   கோரைக் கிழங்கின் பொடி 1 கிராம் அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து தினசரி 2  வேளைகள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.(Harish)

 

29.   கோரைக் கிழங்கு சிறு நீரைப் பெருக்கி, நீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும்.(Harish)

 

30.   கோரைக் கிழங்குப் பொடியை பாலுடன் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் தீரும்.(Harish)

 

31.   கோரைப் பாயில் படுத்து உறங்கினால், குளிர்ச்சியும், நல்ல தூக்கமும் ஏற்படும். சுரம் தணியும்.(Harish)

 

32.   (தொ.எண்:20 – 31 : ஆதாரம், வேலூர், ஸ்ரீ சேஷா ஹெர்பல்ஸ் மருத்துவ மனை, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர். வெ. ஹரிஷ் அன்புச் செல்வன் M.D.(s) அவர்கள் 16-12-2017 நாளிட்ட தினமலர் நாளிதழின் இணைப்பான பெண்கள் மலரில் எழுதிய கட்டுரை.)

 

33.   கோரைக் கிழங்கு கசாயம் குடித்தால் எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும் (178) (180) (1917)

 

34.   கோரைக் கிழங்கு, ஆவாரை வேர், கொன்றை வேர், நாவல் பட்டை, கோஷ்டம் சம அளவு எடுத்து இடித்து பொடி செய்து, இப்பொடியில் அரைத் தேக்கரண்டி எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். நாளடைவில் குணமாகும் .(337)

 

35.   கோரைக் கிழங்கை  தோல் நீக்கி சூப் வைத்துக் கொடுத்து வந்தால் வயிறு பெருத்து உடல் சிறிதாக உள்ள குழந்தைகள் நலம் பெறுவர். (665)

 

36.   கோரைக் கிழங்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து காலை மாலை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி, புத்தி கூர்மை, உடற் பொலிவு உண்டாகும். (476)


=======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !


=================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam77@gmail.com]

ஆட்சியர்,

தமிழ் மூலிகை வலைப்பூ,

[தி.பி:2052,விடை(வைகாசி )05]

{19-05-2021}

=================================================



கோரைக்கிழங்கு

கோரைப்புல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக